சாதாரண விமானம் மூலம் ஜேர்மனை சென்றடைந்தார் ஜனாதிபதி

ஜேர்மனுக்கும் இலங்கைக்கும் இடையில் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தும் நோக்கில் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜேர்மனை இன்று அதிகாலை சென்றடைந்துள்ளார்.

ஜேர்மன் - டெகல் சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை ஜனாதிபதி சென்றடைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஜேர்மன் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் ஜேர்மனுக்கான இலங்கை தூதுவர் கருணாதிலக்க அமுனுகம உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதியை வரவேற்றுள்ளனர்.

அத்துடன், ஜனாதிபதி தங்கியுள்ள விடுதியிலும் அவருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடன் அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம, மஹிந்த சமரசிங்க, தயாகமகே உள்ளிட்ட மேலும் பலர் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி சாதாரண விமானம் மூலம் ஜேர்மனி விஜயம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாதாரண விமானம் ஒன்றின் மூலம் ஜேர்மனிக்கு விஜயம் செய்துள்ளார்.

மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி நேற்று முற்பகல் 9.37 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக ஜேர்மனிக்கு புறப்பட்டுச் சென்றார்.

கட்டார் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான கியூ.ஆர். 665 ரக பயணிகள் விமானத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகள் ஜேர்மனிக்கு பயணித்தனர்.

ஜேர்மனி அதிபர் அன்ஜலா மோர்க்கல், வெளிவிவகார அமைச்சர், வர்த்தக விவகார அமைச்சர் உள்ளிட்ட பலருடன் ஜனாதிபதி தலைமயிலான பிரதிநிதிகள் சந்திப்புக்களை நடாத்த உள்ளனர்.

மூன்று நாள் விஜயத்தை முடித்துக் கொண்டதன் பின்னர் எதிர்வரும் 19ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒஸ்ரியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஒஸ்ரியா விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரி, அந்நாட்டு ஜனாதிபதி ஹெய்ன்ஸ் பித்ஸ்னருடன் சந்திப்பு நடத்த உள்ளார்.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் அரச தலைவர் மட்டுமன்றி அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் வெளிநாட்டு விஜயங்களின் போது தனியான விமானங்களைப்  பயன்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.