உலகின் முதல் ஆழ்கடல் அருங்காட்சியகம்

உலகில் முதன்முறையாக கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் நேற்று (10) திறந்துவைக்கப்படுகிறது. பிரபல சிற்பி ஜேஸன் டிகேர்ஸ் டெய்லரின் கைவண்ணத்தில் உருவான சிற்பங்கள் அடங்கிய இந்த அருங்காட்சியகத்துக்கு ‘மியூசியோ அட்லான்ட்டிக்கோ’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

அத்திலாந்திக் சமுத்திரத்தில் ஸ்பெய்னுக்குச் சொந்தமான லேன்ஸரோத்தே தீவிற்கு அருகாமையில் உள்ள கடற்பரப்பில், 14 மீற்றர் ஆழத்தில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமான இந்த அருங்காட்சியகப் பணிகள் டிசம்பர் மாதம் நிறைவுற்றன. இங்கு 300க்கு மேற்பட்ட சிற்பங்கள் அடங்கிய பன்னிரண்டு தொகுதிகள் நிறுவப்பட்டுள்ளன.

அவற்றுள் 100 தொன்கள் எடையுள்ள 30 மீற்றர் நீள தாவரவியல் பூங்கா, ‘மனிதச் சுழி’ என்ற பெயரில் மனிதனின் தத்ரூப அளவுள்ள 200 மனிதச் சிலைகளாலான ஒரு சக்கரம் என்பன கண்களையே நம்ப மறுக்கும்படி செய்கின்றன. தற்காலத்தில் கடற்பிரதேசங்கள் எதிர்நோக்கும் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.