அப்பா காணாமல் போனார்!! மகன் 3ஏ எடுத்தான்!! தண்ணீர் அழும் மீன்கள்

 இவ்வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ் சென்பற்றிக்ஸ் கல்லுாரியில் கல்வி கற்று கணிதப்பிரிவில் தோற்றி 3 பாடங்களிலும் 3ஏ எடுத்த மாணவன்தான் மணிவண்ணன் மதுசன். 2007ம் ஆண்டு 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி யாழ் மாவட்டத்தில் முதலாம் இடமாகவும் அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழியில் தோற்றியவர்களில் இரண்டாம் இடமாகவும் வந்தும் வேறு எந்த பாடசாலைகளுக்கும் மாறாமல் அதே பாடசாலையில் படித்து க.பொ.த சாதாரணதரத்தில் அனைத்துப் பாடங்களிலும் அதி சிறப்புச் சித்தி பெற்று (9ஏ) தற்போது உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளான் இம்மாணவன்.

யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியே மதுசனின் சொந்த இடமாகும். கடந்த கால யுத்தம் இவனது தந்தையையும் விட்டு வைக்கவில்லை. 2007ம் ஆண்டு தந்தை கடத்தப்பட்டு காணாமல் போனார். புலமைப்பரிசில் பரீட்சையில் முதலாம் இடம் பெற்ற இம்மாணவனை சந்திக்கச் சென்றவர்களிடம் இம் மாணவன் அழுதழுது கூறிய வார்த்தைகள் ‘ எனது அப்பாவை விட்டுவிடுங்கள்‘ என்பதாகும். கணவன் இல்லாது இவனையும் இவனது இரு சகோதரங்களையும் வளர்ப்பதற்கு தாய் பட்ட வேதனைகள் ஏராளம். இடியப்பம் அவித்து விற்ற கைகள் வீங்கிய கதையை எனக்கு தாய் சொல்லும் போது மதுசனின் கண்களுடன் சகோதரங்களின் கண்களும் கலங்கின.

தற்போதும் மதுசனின் குடும்பம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்ததை என்னால் அவதானிக்க முடிந்தது. மதுசனின் தாத்தா கொடுத்து வந்த உதவிப்பணம் மதுசன் மற்றும் ஏனைய பிள்ளைகளின் கல்விக்கு ஓரளவுக்கு உதவி புரிந்து வந்திருந்தது. ஆனால் தாத்தாவும் அண்மையில் மரணமடைந்துவிட்டார் என மதுசன் கண் கலங்கினான்.

நாவாந்துறை எனும் ஊராரின் செல்லப்பிள்ளையாக மதுசன் வளர்க்கப்பட்டு வந்ததையும் என்னால் அவதானிக்க முடிந்தது. மதுசன் 3 ஏ சித்தி பெற்றதை அறிந்து அதிகாலையிலேயே அந்த ஊரில் வெடி கொழுத்திக் கொண்டாடியுள்ளனர். மதுசனின் வீட்டுக்குச் செல்லும் போதும் அதை அவதானிக்க முடிந்தது.

இருக்க சொந்தமாக வீடு இல்லை. காணி இல்லை. கடும் வறுமையுடன் கூடிய குடும்ப நிலை என்பவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு இவ்வாறான பெறுபேறு எடுத்த மதுசனையும் அவனைப் போன்று கல்வியில் உயர்ச்சியடைந்த வறுமை நிலைக்குட்பட்டவர்களையும் வளப்படுத்தி பசளையிட்டு நிமிர்த்து நிற்கச் செய்ய வேண்டியது அனைத்து தமிழர்களின் தலையாய கடமையாகும்.

போரினால் தமிழா்களது பொருளாதாரம் அழிந்து போயுள்ளது. எமது கலாச்சாரக் கட்டமைப்பு சிதைந்து போயுள்ளது. தமிழ்த்தேசிய அரசியலும் கேள்விக்குள்ளாகியுள்ளது. எமது பிரதேசத்து இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் எந்த ஒரு நிலை வந்தாலும் எவராலும் சுரண்ட முடியாத தமிழர்களுக்கே உரிய மூளை வளம் செயற்பாடு அற்றதாக மாறக்கூடாது. அவற்றை கூர்தீட்டி எம்மை உலகத்தின் பார்வைக்கு கொண்டுவரவேண்டியது அவசியம். யூதர்களின் மூளை வளமே அவர்களை உலகின் முன் கொண்டு வந்து நிறுத்தியது. சிங்களப் பெரும்பாண்மைக்கு எதிராக இனி நாம் யுத்தம் தொடர வேண்டுமானால் அது எமது மூளை வளத்தாலேயே மேற்கொள்ளலாம்.

ஆகவே அன்பான புலம்பெயர் தமிழர்களே!! தமிழ்த்தேசிய உணர்வாளர்களே!! இவ்வாறான ஆற்றல் உள்ள மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உங்கள் உதவிகளை அள்ளி வழங்குங்கள். அவர்கள் எம் இனத்தின் மீது நன்றியுடையவர்களாக என்றும் இருப்பார்கள்.