பாம்பு தீண்டியது கூடத் தெரியாமல் விளையாடிய சிறுவன் பரிதாப பலி: யாழில் சம்பவம்

கொடிய விஷப் பாம்பு தீண்டியது கூடத் தெரியாமல் விளையாடிய ஆறு வயதுச் சிறுவனொருவன் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

 சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

நேற்றுக் காலை முதல் மேற்படி சிறுவன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.

இந்த நிலையில் முற்பகல-10 மணியளவில் சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து சிறுவனை அவனது உறவினர்கள் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். 

எனினும், குறித்த சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

 தொண்டைமானாறு மயிலியந்தனைப் பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் நளநிதி (வயது-06) எனும் சிறுவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார்.