யாழில் இரு இடங்களில் 60 இலட்சம் பெறுமதியான கஞ்சா மீட்பு (Photos)

யாழ். குடாநாட்டின் இரு இடங்களில் இருந்து கஞ்சாப் பொதிகள் பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளன.  

யாழ். செம்மணி மயானத்தை அண்டிய பகுதி மற்றும் பருத்தித்துறை குடத்தனை மயானம் ஆகிய பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 60 லட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பிராந்திய விஷேட போதைப்பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்தே குறித்த கஞ்சா போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் யாழ். செம்மணி சுடலை பகுதியிலும் வெளிமாவட்டம் ஒன்றுக்கு கடத்தி செல்வதற்காக வைக்கப்பட்டிருந்த 7 கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் ஒவ்வொன்றும் தலா இரண்டு கிலோ நிறையுடையதாக காணப்பட்டதாகவும், இவற்றின் மொத்த பெறுமதி சுமார் 30இலட்சம் ரூபாய் எனவும் பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரெனிஸ் லோஸ் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து யாழ்.பருத்தித்துறை பகுதியிலும் இது போன்றே கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை குடத்தனை வடக்கு சுடலைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 8 கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றின் மொத்த பெறுமதி 32லட்சம் ரூபாய் எனவும் பருத்தித்துறை பொலிஸார் கூறியுள்ளனர்.

யாழ். குடாநாட்டை போதைப்பொருள் அற்ற மாவட்டமாக மாற்றி அமைத்திட,   யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரெனிஸ் லோஸ் அவர்களினால் முன்னெடுக்கப்படும் இந்த விசேட போதை பொருட்கள் கைப்பற்றும் நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.