பிரபாகரனை அழிக்க இந்திய அரசுடன் கைகோர்த்த தமிழகத் தலைவர்கள்: போட்டுடைத்தார் மேனன்

முள்ளிவாய்க்கால் போரின் இறுதித் தறுவாயில் பிரபாகரனைக் காப்பாற்றுவதற்கு அமெரிக்கா, நோர்வே ஆகிய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளை இந்தியா தீவிரமாக எதிர்த்தது . இந்திய அரசின் இந்த  நிலைப்பாட்டுக்கு தமிழ்நாட்டின் பிரதான அரசியல் தலைமைகள் ஆதரவு அளித்தன என்று இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இறுதிப்போர் நடந்த காலகட்டத்தில் இந்திய வெளிவிவகாரச் செயலராக இருந்த சிவ்சங்கர் மேனன், ஓய்வு பெற்ற பின்னர் எழுதிய “Choices: Inside the Making of India’s  Foreign Policy”. என்ற நூல் அண்மையில் வெளியாகியுள்ளது.

இந்த நூலிலேயே, தமிழ்நாட்டின் தலைவர்கள் அரசியல் ரீதியாகப் பிளவுபட்டிருந்தாலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் காப்பாற்றுவதற்கு அமெரிக்கா, நோர்வே எடுத்த முயற்சிகளுக்கு எதிராக இந்தியா எடுத்திருந்த நிலைப்பாட்டுக்கு தனிப்பட்டமுறையில் ஒருமித்த ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

‘இந்தியாவில் உள்ள தமிழ்த் தலைவர்களை பௌதிக ரீதியாக அழிப்பதன் மூலமே பிரபாகரனால் தமிழீழத்தை அடைய முடியும் என்று  தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் அறிந்திருந்தார்கள். சிறிலங்காவில் உள்ள தமிழ்த் தலைவர்கள் அவ்வாறே கொல்லப்பட்டிருந்தார்கள்.

சிறிலங்கா தொடர்பாக தமிழ்நாட்டுக்கும், புதுடெல்லிக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக வெளியில் தோன்றியிருந்திருந்தாலும், இரண்டு தரப்புகளுமே ஒருமித்த கருத்திலேயே இருந்தன. திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுமே இந்த நிலையில் தான் இருந்தன.

அப்போதைய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியினதும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனினதும் கடுமையான உழைப்பின் விளைவே இது. நான் தனியாக சென்னையில் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களை இரகசியமாகச் சந்தித்த போது, இதனைக் கண்டு கொண்டேன்.

ராஜீவ்காந்தி கொலைக்குப்பின்னர் விடுதலைப் புலிகள் தொடர்பாக முழு இந்தியாவினதும் அணுகுமுறை ஒரே விதமானதாகவே இருந்தது. அது சிறிலங்கா அரசாங்கத்தையும் ஒரே கோட்டுக்குள் கொண்டு வந்தது.

இந்தியாவின் கொள்கைத் தெரிவுகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. வெற்றிபெறும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தியாவில் தங்கியிருக்கமாட்டார் என்பதையும், இந்தியாவுக்கு குறைந்தளவுக்கே பதிலளிப்பார் என்பதையும் புதுடெல்லி நன்கு அறிந்திருந்தது.

இராணுவம் உள்ளிட்ட அதிகாரத்தில் மாத்திரம் ராஜபக்ச உறுதியான பிடியைக் கொண்டிருக்கவில்லை. சீனா, பாகிஸ்தான், மற்றும் அமெரிக்காவினது பின்புல ஆதரவும் அவருக்கு இருந்தது.

புலனாய்வு மற்றும் இராணுவப் பயிற்சிகள் விடயத்தில் ராஜபக்சவுக்கு உதவ அமெரிக்கா விரும்பியது. ஆனால், மனித உரிமைகள் விடயத்தில் கரிசனைகளை எழுப்பியது.

இந்தியப் பிரதமர் ஒருவரைக் கொலை செய்தவர்களை விட்டு விடுமாறு ராஜபக்சவிடம் இந்தியா கேட்டிருந்தால்,அடுத்த பத்தாண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான காலம் சிறிலங்காவை விட்டு எம்மை நாமே வெளியேற்றியதாக அமைந்திருக்கும்.

சிறிலங்காவில் உள்ள எமது கடல்சார் மற்றும் ஏனைய நலன்களை தியாகம் செய்ய வேண்டியிருந்திருக்கும். புவிசார் அரசியல் மூலோபாய முக்கியத்துவம் கொண்ட அண்டைநாடு ஏனைய சக்தி வாய்ந்த நாடுகளின் கையில் சிக்கியிருக்கும்.

வெற்றியின் விளிம்பில் இருந்த போது மகிந்த ராஜபக்ச மேற்குலகின் போர் நிறுத்த மற்றும், விடுதலைப் புலிகளின் தலைவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் திட்டங்களுக்கு இணங்கத் தயாராக இருக்கவில்லை. பொதுமக்கள் மத்தியில் இழப்பைக் குறைப்பதற்கு அப்போது அதுவே ஒரே வழியாக இருந்தது.” என்றும் அவர் கூறியுள்ளார்.