இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிரான தீவிர பிரச்சாரத்தில் மீள்குடியேற்ற அமைச்சு

வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பம்பைமடு, தாலிக்குளம், பூவரசங்குளம், வேலங்குளம், புலவனூர், கந்தன்குளம், குருக்களூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வீட்டுத் திட்டம் தொடர்பிலான கலந்துரையாடலொன்றுக்காக இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் தாலிக்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் சமூகமளிக்குமாறு    அழைக்கப்பட்டு இருந்தனர். 

இந்த கலந்துரையாடலுக்கு மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனும் வன்னி அமைச்சர் றிசாட் பதியுதீனும் கலந்து கொள்ள இருப்பதாக மக்களுக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. 

ஆனால், இந்த இரண்டு அமைச்சர்களும் கலந்து கொள்ளாத நிலையில், மீள்குடியேற்ற அமைச்சரின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் மற்றும் உரிய அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.  

பொருத்துவீட்டுத் திட்டம் தொடர்பில் தமிழரசுக் கட்சிக்கும், மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனுக்கும் இடையில் கடும் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், மீள்குடியேற்ற அமைச்சின் குறித்த இணைப்பாளர் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் சம்பந்தன், சுமந்திரன் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்கள் மத்தியில் கருத்துக் கூறியுள்ளார். 

அவர் அங்கு முக்கியமாக தெரிவித்த விடயங்கள் வருமாறு, 

அவர்களுக்கு (தமிழரசுக் கட்சிக்கு) வாக்களித்து நீங்கள் நாடாளுமன்றுக்கு அனுப்பி வைத்தீர்கள். உங்களுக்கு உருப்படியாக கிடைத்தது தான் என்ன? 

அவர்கள் தேர்தல் காலங்களில் மட்டும் தான் உங்கள் வீடுகளை தேடி வருவார்கள். மற்றைய நேரங்களில் வந்திருக்கிறார்களா? 

உங்களிடம் வாக்கு கேட்கவே வராத எங்களுடைய அமைச்சர் சுவாமிநாதன் உங்களுக்கு வீட்டுத் திட்டத்தை பெற்றுத் தருவதற்கு கடும் அக்கறையோடு தீவிர முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றார். 

அமைச்சரின் இந்த முயற்சிகளை தமிழரசுக் கட்சி குழப்பி வருகிறது. 

அவர்கள் இலங்கை நாடாளுமன்றில் ஒரு கோடியே 25 இலட்சம் ரூபாய் சம்பளம் பெறுகின்றார்கள். 

தீர்வையில்லாமல் அவர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு கோட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.          

கொழும்பில் வசிப்பதற்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இப்படி அரசின் பலவேறுதரப்பட்ட சலுகைகளை அனுபவித்துக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். 

மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசாங்கத்தால் இரா. சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித்தலைவர் பதவியும், மாவை சேனாதிராசாவுக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பதவியும், செல்வம் எம்பிக்கு நாடாளுமன்றக் குழுக்களின் தலைவர் பதவியும் வழங்கப்பட்டுள்ளன. 

ஆனால் இவர்களோ அதன் மூலம் தங்களுக்கு தேவையானதை மட்டும் அரசிடம் பெற்று அனுபவிக்கின்றனர். மக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகளை ஏனோ மறந்துவிடுகின்றனர்.

குடிசை வீட்டில் வாழும் உங்களுக்கு நிரந்தர வீட்டுத் திட்டம் கிடைப்பதை தடுத்து நிறுத்தி வருகின்றார்கள். 

எனவே வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த நீங்கள் அமைச்சருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என தமிழரசுக் கட்சி மீதான குற்றச்சாட்டுக்களை இடைவிடாமல் அடுக்கினார்.  

மேலும், குறித்த பிரதேசங்களை சேர்ந்த மக்கள் கொண்டு வந்திருந்த வீட்டுத் திட்டங்களுக்கான கோரிக்கை கடிதங்களையும் பெற்றுக் கொண்டார்.