வர்தா புயல் கோரத் தாண்டவத்தால் தத்தளித்த சென்னை (Video)

அதிதீவிர 'வார்தா' புயல் திங்கள்கிழமை மாலை கரையைக் கடந்தது. சூறைக்காற்றாலும் கனமழையாலும் தத்தளித்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் மாலை 6.30 மணியளவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "அதிதீவிர வார்தா புயல் சென்னை அருகே மாலை 3 மணியில் இருந்து 5 மணிக்கு இடைபட்ட நேரத்தில் கரையைக் கடந்தது. அப்போது, காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வரை இருந்தது.

வார்தா புயல் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதனால், அடுத்த 24 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை தொடரும். காற்றின் வேகம் மணிக்கு 60-ல் இருந்து 70 கிலோமீட்டராக குறையும்" என்றார் அவர்.

22 ஆண்டுகளுக்கு பிறகு...

இதற்கிடையே மத்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்ட தகவலில், சென்னையில் 192 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 ஆண்டுகளுக்கு பிறகு, இதுபோன்ற மோசமான புயலை சென்னை சந்தித்த தகவலும் வெளியாகியுள்ளது.

முதல்வர் வேண்டுகோள்:

முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வார்தா புயல் தொடர்பாக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கூறப்பட்டிருந்தது.

புயலின் கோர தாண்டவம்...

தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, படிப்படியாக வலுப்பெற்று, 4 நாட்களுக்கு முன்பு 'வார்தா புயலாக உருமாறியது. தமிழகத்தை நோக்கி நகரத் தொடங்கிய இந்த புயல், பின்னர் அதிதீவிர புயலாக மாறியது.

இந்த வர்தா புயல் கரையை நெருங்க, நெருங்க ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் லேசான காற்றும், மழையும் தொடங்கியது. திங்கள்கிழமை காலையில் காற்றின் வேகமும், மழையும் மேலும் அதிகமானது.

ஆயிரக்கணகான மரங்கள் சாய்ந்தன...

சுமார் 12 மணி அளவில் உச்சநிலையை அடைந்து நகரின் பல்வேறு பகுதிகளில் சூரைக்காற்று பேயாட்டம் ஆடியது. கனமழையம் கொட்டித் தீர்த்தது. அதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாலையில் 1000-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் பெயர்ந்தன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

அவசரம் கருதி வெளியில் வந்தவர்களின் வாகனங்கள், ஆங்காங்கே திருப்பி விடப்பட்டன. விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தீயணைப்பு படை வீரர்கள், போலீஸார் ஈடுபட்டனர். அவர்கள் அறுவை இயந்திரங்கள் மூலமாக அறுத்து, ஜேசிபி இந்திரங்கள் மூலமாக அகற்றி, உடனடியாக சீரான போக்குவரத்துக்கு வழிவகை செய்தனர்.

வீடுகளிலேயே முடங்கிய மக்கள்

இந்த புயல் உருவான உடனேயே அரசின் வருவாய்த்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, போதிய மீட்புக் குழுக்களை ஏற்படுத்தவும், தேசிய பேரிடர் மீட்பு படைகளைத் அழைத்து தயார் நிலையில் நிறுத்தவும், நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்கவும், அவர்களுக்கு தேவையான உணவை வழங்க உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தியது.

அதனைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியில் கூட, அந்தந்த மண்டலங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளும் முடுக்கி விடப்பட்டனர். அரசும், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று முன்கூட்டியே அரசு சார்பில் அறிவிப்பும் வெளியிட்டிருந்தது.

நீண்ட நேரம் கெடாமலிருக்கும் உணவுகளை சமைத்து வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. தாழ்வான பகுதிகளில் இருந்த மக்களும் நிவாரண முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டனர். இதன் காரணமாக, புயல் சென்னையை புரட்டிப் போட்ட நிலையில், மக்கள் வீடுகளிலே முடங்கி, நிம்மதியாக இருந்தனர். முன்கூட்டியே பொதுமக்கள் காய்கறிகள், பால், கேன் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டிய வாங்கி இருப்பில் வைத்துக்கொண்டனர். இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.

அமைச்சர்கள் ஆய்வு:

சென்னையில் 30 முகாம்களில் 600 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அம்மா உணவகங்கள் மூலமாக உணவு வழங்கப்பட்டது. இப்பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அத்துறை செயலர் க.பணீந்திரரெட்டி, மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், மேற்பார்வை அலுவலர் காக்கர்லா உஷா ஆகியோர் ஆய்வு செய்தனர்.