இந்தியாவில் மட்டுமல்ல இங்கேயும் பெண்களுக்கு இதே நிலை தான்

``என் மனைவி வெச்சிருந்த, 2500 ரூபாய் கருப்புப் பணத்தை வெளியே கொண்டுவந்த மோடி அரசு வாழ்க!’’ 

`மோடியின் இரவில்' மிக அதிகமாகப் பகிரப்பட்ட வாட்ஸ்அப் செய்தி இது. இந்தச் செய்திகளுக்குப் பின்னால் ஓர் ஆணாதிக்கப் பெருமிதம் வெளிப்படுவதை யாருமே உணர்ந்துகொள்ள முடியும். `இத்தனை நாள் எனக்குத் தெரியாம ஆட்டையைப் போட்டல்ல இப்ப மாட்டுனியா?' என்ற ஓர் அதிகாரக் கொக்கரிப்பு அது. பொருளாதாரத் தேவைகளைச் சுயமாக நிர்வகிக்கிற பெண்ணின் மீதான வெறுப்பின் வெளிப்பாடு.

டாஸ்மாக்குகள் ஆட்சிசெய்யும் தமிழ்நாட்டில் வீட்டை அடையும் ஆணின் வருவாய் என்பது மிகவும் சொற்பமே. பெண்களால்தான் பல வீடுகளின் நிதியாதாரங்கள் காக்கப்படுகின்றன. அந்தச் சில்லறைச் சேமிப்புகளும் சிறுவாட்டுக் காசுகளும்தான் `பிரதமர் மோடியின் துல்லியத் தாக்குதலில்' இப்போது கைப்பற்றப்பட்டிருக்கிறது. இப்போது மோடியின் உதவியோடு ஆண்களால் `மீட்க’ப்பட்ட இந்தக் கறுப்புப் பணத்தில் எவ்வளவு தொகை பெண்களுக்கு மீளக் கிடைக்கும்? 

‘‘எங்களுக்கு நான்கு மகள்கள். மூன்று பேருக்குத் திருமணம் செய்துவிட்டேன். கடைசி மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எங்க வீட்டுக்காரர் ஆட்டோ மொபைல் ஷோரூம் வைத்திருக்கிறார். அவருக்கு எவ்வளவு பணம் கிடைத்தாலும் ஷோரூமை டெவலப் செய்வதாகச் சொல்லி செலவுசெய்துவிடுவார். அதனால் அவருக்குத் தெரியாமல் சீட்டு போட்டு சேமித்து வைத்திருக்கும் தொகையில், மகளுக்கு கூடுதலாக நகைகள் போட்டு திருமணம் செய்து வைத்திருக்கிறேன். அதேபோல கடைசி மகளுக்கும் கூடுதலாக நகை போடுவதற்காக சீட்டு போட்டு போன வாரம் தான் இரண்டரை லட்சம் ரூபாய் எடுத்துவைத்திருந்தேன். அதில் அதிகப்படியாக 500, 

1,000 ரூபாய் தாள்களாக இருக்கின்றன. அதை எப்படி மாற்றுவது எனத் தெரியாமல் கடைசியா அவருகிட்ட உண்மையைச் சொல்லிட்டேன். அவர் தன்னுடைய நிறுவனத்துக்கு அவசரமாகத் தேவை என வாங்கிப் போய்விட்டார். இனி அந்தத் தொகையைத் திரும்ப வாங்க பெரிய போராட்டமே நடத்த வேண்டி இருக்கும்!’’ - திருச்சியைச் சேர்ந்த பர்வின்பானுவின் நிலைமை இது. 

பெண்கள் தாங்களாகவே வங்கிக்கணக்கில் ரகசியமாகப் போட்டு மாற்றலாமே என்ற கேள்வி எழலாம். ஆனால் இன்றும்கூட பல குடும்பங்களில் ஆணின் தயவு இல்லாமல் பெண்களால் வங்கிகளில் கணக்கு வைத்துக்கொள்வதும், அதை நிர்வகிப்பதும் சாத்தியம் அல்ல.  

``பசங்க அனுப்புற சம்பளத்துல மிச்சம்புடிச்சு ஐந்நூறு ஆயிரத்தை அப்பப்போ கொஞ்ச கொஞ்சமா சேர்த்துவெச்சிருக்கேன். வீட்டுக்காரருக்குத் தெரியாம நான் வெச்சிருக்கிறதே பெரிய விஷயம். அவசியமா தேவைப்படும்போது அதில் இருந்து எடுத்துக்குவேன். பல நேரங்கள்ல கைகொடுக்கும். எப்படிக் கிடைச்சதுனு வீட்டுல கேட்டா பக்கத்து வீட்டு அக்காகிட்ட கடன் வாங்குனேன்னு சொல்லிச் சமாளிப்பேன். அப்படித்தான் எங்க தெருவுல நிறையப் பேர் வீட்டுல ரகசிய கஜானா நடத்திட்டிருக்கோம். 

ஆனா இந்த கவர்மென்ட் திடீர்னு ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் செல்லாதுனு அறிவிச்சதும் என்ன பண்றது ஏது பண்றதுன்னு தெரியலை. `நாசுக்கா பேங்க்ல போய் போட்டுடலாம்ல’னு நீங்க கேப்பீங்க. அதுக்கு வழியிருக்குத் தான். ஆனா என் அக்கவுன்ட்க்கு கான்டாக்ட் நம்பர் என் கணவர் நம்பரைத்தான் கொடுத்திருக்கோம். அதனால், நூறு ரூபாய் போட்டாக்கூட அவர் போனுக்கு மெசேஜ் போய்டும். இப்ப என்ன செய்றதுனு தெரியலை. எப்படியும் நான் சேர்த்து வெச்சிருக்கிற பணம், என் வீட்டுக்காரருக்குத் தெரிஞ்சுடும். இனி புதுசாத்தான் என் ரகசிய சேமிப்பைத் தொடங்கணும்’’- வேதனையோடு சொன்னார் மதுரையைச் சேர்ந்த சுபலட்சுமி. 

இதுதான் இன்றைய உண்மை நிலை. இன்னும் ஏராளமான சுபலட்சுமிகளுக்கு வங்கிக்கணக்கு என்பது கணவனால் தந்தையால் மகன்களால் கண்காணிக்கப் படுகிறது; ஆண்களால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. வேலைக்குச் செல்லும் மனைவியின் டெபிட்கார்டையும் சேர்த்து தன்வசம் வைத்துக்கொண்டு தேவையான பணத்தை மட்டும் எடுத்துத்தருகிற கணவர்கள்தான் இங்கே அதிகம். 

பெண்களுக்கான பொருளாதாரச் சுதந்திரம் என்பது இந்தியா முழுக்கவே இப்படித்தான். பொருளீட்டுதலும், அதை விருப்பம்போல செலவழித்தலும் இங்கே ஆணுக்கான உரிமையாகப் பார்க்கப்படுகிறது. கையில் 1,000 ரூபாய் தாள்களாக வைத்துக்கொண்டு, `இதை என்ன பண்றதுனு தெரியலை, மகன் கண்ணுல பட்டா போச்சு புடுங்கிக்குவான்' எனக் கதறி அழும் பாட்டிகளின் குரல்களை, இந்த நாட்களில்  வங்கி வாசல்களில் பார்க்க முடிகிறது. 

வீட்டில் இருந்த சேமிப்புப் பணம் பறிபோனதால் மட்டும் அல்ல... மளிகை, பால், பேப்பர், கேபிள் என ஒவ்வொரு நாளும் வசூலுக்கு வருபவர்களை எதிர்கொள்கிறவர்களும் பெண்கள்தான். 
``தினமும் ஹவுஸ் ஓனருக்கு நான்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கு. பேப்பர்காரர், பால்காரர்னு எல்லோருக்குமே இன்னும் பணம் கொடுத்து முடிக்கலை. சில்லறை இல்லாம மளிகைச் சாமான்கள் வாங்க முடியலை’’ என்கிறார் விருதுநகரைச் சேர்ந்த நித்யா. 

கணவனுக்கு, மகனுக்கு, தந்தைக்குத் தெரியாமல்  வீட்டுப்பெண்களால் சேமிக்கப்படும் எந்தச் சிறுதொகையும் வெட்டிச்செலவுகளுக்கு செல்வது இல்லை. அவை சுயதேவைகளுக்கானவை அல்ல... அவசரத் தேவைகளுக்காக  உதவுபவை. தன் மகளின் திருமணத்துக்கு என நகை சேர்க்கவும், மகனின் கல்விக்கு என பொருள் சேர்க்கவுமான போராட்டத்தில் வீட்டுப் பெண்களின் மிகப்பெரிய பங்களிப்புகளே, இந்தக் கடுகு டப்பா சேமிப்புகள். தங்க நகைகள்தான் இன்றுவரை ஒவ்வொரு இந்தியனின் வீட்டிலும் செய்யப்படுகிற முதல் சேமிப்பு; முதலீடு. அடுப்பங்கரைகளில்தான் ஒவ்வொரு குடும்பத்துக்குமான `எமர்ஜென்ஸி ஃபண்ட்' சேர்க்கப்படுகிறது. 

மோடியின் நோக்கம் நியாயமானது. ஆனால்,  வீட்டை நிர்வகிக்கும் பெண்களைப் பற்றியும்  அவர் சிந்தித்திருக்கலாம். பெண்கள் பலரும் தங்கள் சேமிப்பை வீட்டு ஆண்களிடம் இழந்து நிற்கிறார்கள். இனி அவர்கள் தங்களின் பொருளாதாரச் சுதந்திரத்துக்கான போராட்டத்தை முதலில் இருந்து தொடங்க வேண்டும்!

நன்றி: விகடன்-