ஜெயம் ரவியின் போகன் காப்பி கதை - ரகசியத்தை உடைத்த எழுத்தாளர்கள் சங்கம்

ஜெயம் ரவி, அரவிந்த்சாமி நடிப்பில் லக்ஷ்மண் இயக்கிவரும் போகன் படத்தின் கதை லக்ஷ்மணின் சொந்தச் சரக்கல்ல, அது பல வெளிநாட்டுப் படங்களின் தழுவல் என்ற ரகசியத்தை திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் போட்டுடைத்துள்ளது.

போகன் படத்தின் கதை என்னுடையது என்று உரிமை கொண்டாடி வருகிறார் ஆண்டனி என்கிற இயக்குனர். இவர் எடுத்து பாதியில் நின்றுபோன அல்வா படத்தின் கதைதான் போகன் என்பது ஆண்டனியின் வாதம். ஆனால், லக்ஷ்மண் அதனை மறுக்கிறார். இந்தப் பிரச்சனை அடிதடிவரை போய் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆண்டனி, லக்ஷ்மண் இரண்டு பேரின் கதைகளுமே அவர்களின் சொந்தச் சரக்கல்ல, வெளிநாட்டுப் படங்களின் காப்பி என்பதை திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளது. அந்த அறிக்கை வருமாறு...

ஆண்டனி தாமஸ் என்பவர் 11.01.2016 அன்று தான் எங்கள் சங்கத்தில் உறுப்பினாராக இணைந்தார். உறுப்பினரான 2ம் நாளே அல்வா என்ற தலைப்பில் ஆறு பக்கங்கள் கொண்ட கதையை பதிவு செய்தார். மீண்டும் 27.01.2016 அன்று அதே அல்வா என்ற தலைப்பில் சற்று விரிவான அதிக பக்கங்கள் கொண்ட ஒரு கதையை பதிவு செய்தார்.

பின்பு தன் கதையை லட்சுமண் என்ற இயக்குநர் போகன் என்ற பெயரில் திரைப்படமாக்கி வருகிறார் என்ற புகாரை சங்கத்தில் பதிவு செய்து தனக்கு நியாயம் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டார்.