எப்போதும் பணம் சம்பாதிக்கும் ரகசியம்

புத்தகத்தின் பெயர்: ரிச் இஸ் எ ரிலிஜியன் (Rich is a Religion)

ஆசிரியர்: மார்க் ஸ்டீவன்ஸ் (Mark Stevens)

பதிப்பாளர்: Wiley

என் இளமைக் காலத்தில் மிகக் குறைந்த சம்பளத்தில் என்னை வேலைக்கு அமர்த்தி பணத்தின் அருமை குறித்து ஹார்வர்டு மேலாண்மை கல்லூரிகூட சொல்லித் தராத அளவுக்கு எனக்கு பாடம் கற்றுக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. உங்களுடைய ட்யூஷன் பீஸ் தபாலில் வந்துகொண்டிருக்கிறது’ என அதிரடியாக ஆரம்பிக்கிறார் இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் ‘ரிச் இஸ் எ ரிலிஜியன்’ என்னும் புத்தகத்தை எழுதிய ஆசிரியரான மார்க் ஸ்டீவன்ஸ். 

‘வாழ்க்கையில் பெரும் பான்மையான சமயங்களில் நம்முடைய நாட்களை எப்படி செலவு செய்தோம் என்று நினைத்துப் பார்க்கிறோம். அதே போல்தான், பண விஷயத்திலும். பணத்தை எப்படி செலவு செய்கிறோம் என்றே பெரும்பான்மையான சமயம் நாம் பேசுகிறோம். பெரும் செலவாளியாக நாம் இருந்தோமேயானால், மால்களுக்கு செல்வதே நம்முடைய வாழ்க்கையின் பயணமாக இருக்கும் இல்லையா?’ என்று கேட்கும் ஆசிரியர், முதலில் பணவசதியுடன் இருத்தல் என்பது ஒரு மார்க்கம் என்பதை புரிந்துகொள்ள என்னென்ன விஷயங்கள் தெரியவேண்டும் என்பதை இந்தப் புத்தகத்தில் சொல்கிறார்.

எது பணம் எது பணம் இல்லை, எப்படி சிறந்த சொத்துக்களில் முதலீடு செய்து உங்களுடைய செல்வத்தை பெருக்குவது, உங்கள் சொத்துக் களை பாதுகாப்பதற்கான விதிகள், நீங்கள் உறங்கும்போதும் எப்படி பணம் சம்பாதிப்பது, பண சம்பந்தமான விஷயங்களைப் பற்றி சந்தேகங்கள் வரும்போது யார் யாரை அணுகவேண்டும், யாருக்கும் தெரியாமல் பணத்தை வைத்திருப்பதன் அவசியம் போன்றவற்றை இந்தப் புத்தகம் விளக்கமாகச் சொல்கிறது.

பணம் ஒரு பொருட்டே இல்லை என்று சொல்பவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கின்றனர். பணம்தான் எல்லாம் என்று சொல்பவர்கள் ஒருபோதும் மனநிறைவை அடைவதில்லை. இந்தப் புத்தகம் நீங்கள் ஒருபோதும் நினைத்துப் பார்க்காத அளவு பணத்தினை சம்பாதிப்பது  எப்படி என்பதைச் சொல்லித் தருகிறது. 

நம்மில் பெரும்பாலானோர், நம்மிடம் பணம் வந்தால் நாம் ஆசைப்படும் பல்வேறு விஷயங்களை வாங்கிக் குவிக்கலாம் என்று நினைக்கிறார்கள். அதாவது, பணத்தைக் கொண்டு இன்னொன்றை வாங்கலாம் என்று நினைக்கிறார்கள். சம்பாதிக்க வேண்டும், செலவழிக்க  வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்று நாம் நினைத்துக்கொண்டிருந்தால், வருமானம் மற்றும் செலவு என்ற இரண்டு கோல் போஸ்ட்டுகளுக்கு நடுவே வாழ்நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான் என்கிறார் ஆசிரியர். 

‘‘சம்பாதித்தல், செலவழித்தல், முதலீடு செய்தல் போன்றவற்றை ஒரு மார்க்கமாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். மார்க்கம் என்றால் சாமி மற்றும் வணங்குதல் என்ற அர்த்தத்தில் இல்லை. அதாவது, ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை வாங்கும் கமாடிட்டியாக அதை நினைக்காதீர்கள் என்கிறேன். 

பணம் என்று வரும்போது எல்லோரும் ஒரே மதம்தான் என்று வோல்ட்டேர் என்ற அறிஞர் கூறியுள்ளார். ஆனால், அதில் ஒரு சில மாறுதல்கள் இருக்கிறது. எல்லோரும் சம்பாதிக்கிறோம். செலவழிக்கிறோம். இந்த இரண்டுக்கும்  நடுவே சில இடத்தில் சொத்து சேர்கிறது. சில இடத்தில் சேர்வதேயில்லை. இந்த இரண்டு இடத்துக்கும் நடுவே நாம் வசதியாகவோ அல்லது வசதிகள் இல்லாமலோ வாழ்ந்துவிட்டுப் போய்விடுகிறோம். 

இந்த வாழ்க்கையில் இரண்டு வித மனிதர்களைப் பார்க்கிறோம். முதலாவதாக, பணம் என்பது குறித்த எந்தவிதமான தத்துவ ஞானமும் இல்லாத பல மனிதர்கள்; இரண்டாவதாக, பணம் பற்றி ஏகமும் புரிந்த மிகக் குறைந்த அளவே உள்ள பணம் என்னும் மதத்தைச் சார்ந்தவர்கள். இதில் இரண்டாம் வகை மனிதர்களிடம் இருந்து மட்டுமே நாம் நிறைய விஷயங்களை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது என்கிறார் ஆசிரியர்.

பணத்தைப் பொறுத்தவரை, எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதைப் பற்றிக் கவலை இல்லை. அதை வைத்துக்கொண்டு எதைச் செய்கிறோம் என்பதில்தான் முக்கியமான விஷயமே இருக்கிறது. சம்பாதித்த பணத்தை எப்படி உபயோகிக்கிறோம், எப்படி காப்பாற்றுகிறோம், யாரிடம் கொடுத்து வைக்கிறோம், யாருக்கு நம்மிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது தெரியும்.நம்மிடம் இருக்கும் பணத்தை வைத்து எவற்றையெல்லாம் செய்ய முடியாது போன்றவற்றை யெல்லாம் தெரிந்து வைத்துக் கொள்வதே முக்கியம் என்கிறார் ஆசிரியர். எது பணம், எது பணம் இல்லை என்பதைப் பற்றி ஆசிரியர் ஒரு முக்கிய விளக்கத்தினை தந்துள்ளார்.

பணம் என்பது நாம் விரும்பும் வாழ்க்கையை வாழ உதவும் ஒரு விஷயம். பணத்தின் மூலம் நாம் சில சரியான மற்றும் ஸ்திரமான சொத்துக்களை உருவாக்கினால், நாம் பணரீதியாக சுதந்திரமான வாழ்க்கையை வாழ முடியும். கவலையில்லா வாழ்க்கையை நிரந்தரமாக்கும் வண்ணம் அதை சரியாக நம்மால் உபயோகித்துக் கொள்ள முடியும்.

நம் உறவினர்களையும் நண்பர்களையும் நம்மைப் பார்த்து பொறாமைப்படச் செய்ய வைப்பது பணம் இல்லை. வீடுகள், கார்கள், நினைத்த பொருட்கள் மற்றும் ஆடைகளை வாங்கிக் கொள்ளச் செய்வது பணம் இல்லை. குவிந்து கொண்டே போகும் பணமும் பணம் இல்லை. அறிவை இழந்து முழுச் சூதாட்டத்தில் இறங்குவதற்கு ஒப்பான செயல்களைச் செய்து சம்பாதிக்கும் பணமும் பணமே இல்லை என்கிறார் ஆசிரியர்.

கடன் என்பதின் தாக்கத்தை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி சொல்லும் ஆசிரியர், நவீன கால அடமானக் (தங்கம், வீடு போன்ற சொத்துக்கு ஈடான கடன்கள்) கடன்கள் உங்களால் இன்றைக்கு இயலாத கனவை நாளை பணம் தருகிறேன் என்று சொல்லி வாங்குவதேயாகும் என்கிறார். நாளைக்கு நம்முடைய வேலை இருக்குமா, வட்டி அதிகரித்தால், சமாளிக்க முடியுமா, குழந்தைகளுக்கு ஆகும் செலவுகள் ஏதும் அதிகரித்தால், அந்தச் செலவுடன் சேர்த்து உங்களுடைய கடனுக்கான தொகையையும் உங்கள் வருமானத்துக்குள்ளேயே வைக்க முடியுமா என்பது போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரியாமலேயே பலரும் இந்த அடமானக் கடன் வாங்க முனைவதினாலேயே இதைச் சொல்கிறேன் என்கிறார் ஆசிரியர்.

பணம் என்னும் மார்க்கத்தின் முக்கிய தத்துவமே உங்களிடம் இருக்கும் பண வசதியை மற்றவர்கள் அறிந்து கொள்ளாதிருக்கும் வண்ணம் இருக்கக்கூடிய விஷயங்கள்தான் நிஜமான பணவசதியை தரும் விஷயங்களாகும். அதாவது, பகட்டான தோற்றம், ஆடம்பர வாழ்க்கை, ஆடை, ஆபரணங்கள், கார்கள், லேட்டஸ்ட் போன் போன்றவையெல்லாம் உங்களிடம் இருக்கும் பணத்தை மற்றவர்கள் தெரிந்துகொள்ள வைப்பவை. 

உங்கள் வசம் ஊரில் இருக்கும் ஏக்கர் கணக்கான நல்லதொரு விளைநிலம், அதீத வாடகையை மாதாமாதம் தரும் பில்டிங்குகள், நிரந்தர ஏற்றம் காணும் நல்ல பங்குச் சந்தை முதலீடுகள் போன்றவை உங்களைப் பார்க்கும் அனைவரின் கண்ணுக்கும் தெரியாது. மதிப்பு மிக்கவையாக இருந்தாலும்கூட, சாதாரணமாக உங்களைப் பார்க்கும் நபர்கள் அனைவருக்கும் இவை புலப்படாது. இப்படி மற்றவர்கள் கண்ணில் படாத வசதிகளே உங்களை வளப்படுத்தக்கூடிய சொத்தாகும். 

இந்தக் கொள்கையை கடைபிடிக்க முக்கியமாக செய்ய வேண்டியவை மூன்று விஷயங்கள். தேவையில்லாத எதையும் வாங்காதிருத்தல், என்னை ஏழை என்றோ, பணக்காரர் என்றோ மற்றவர் நினைத்தால் எனக்கொன்றும் கவலையில்லை என்ற மனநிலையை வளர்த்துக் கொள்ளுதல்,  மதிப்புக்கூடக்கூடிய வகை சொத்துக்களை மட்டுமே வாங்குதல் என்ற மூன்று விஷயங்களை கடைபிடித்தாலே இந்த நிலை சுலபத்தில் கைகூடும் என்கிறார் ஆசிரியர். 

உங்களுடைய நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே தெரிந்து கொள்கிற வகையில் இருப்பதே சொத்துக்களாகும். ஏனைய எல்லாம் பகட்டே என்கிறார் ஆசிரியர். தங்கள் திறனுக்கு மீறி பங்களாக்களில் வாழ்ந்து ஷோ காண்பிக்கும் பலரும் அடுத்த மாத சம்பளம் வராவிட்டால், திண்டாடிபோகும் நிலையிலேயே இருப்பார்கள். வாழ்க்கை ஒரு விளையாட்டு என்ற எண்ணம் கொண்டவர்கள் இவர்கள். அது உண்மையில்லை. சொத்து என்பது மிகமிக புனிதமானது என அவர்கள் புரிந்து கொள்வதே இல்லை என்கிறார் ஆசிரியர்.

வசதியான வாழ்க்கை வாழ நினைக்கும் அனைவரும் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் செய்யும் பெரிய செலவுகள் எல்லாமே எதிர்காலத்தில் பன்மடங்கு மதிப்பு உயரும் வண்ணம் இருக்கும் விஷயங்களுக்காக மட்டுமே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதலே அதற்குப் போதுமானது என்கிறார் ஆசிரியர்.

வசதி படைத்த மனிதனாக வாழவேண்டும் என்று ஆசைப்பட்டால், நீங்கள் தூங்கும் போதும் சம்பாதிக்க தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அதாவது, உங்கள் முதலீடுகள் தானாகவே வளர்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தம் என்கிறார் ஆசிரியர். 

அதுவும் தவிர, அடுத்தவர்கள் நம்மை மதிக்கவேண்டும் என்பதற்காக ஒருபோதும் பணத்தை செலவழிக்காது இருத்தல் வேண்டும் என்கிறார் ஆசிரியர்.உங்கள் தகுதிக்கு குறைவான வாழ்க்கை முறையை நீங்கள் தேர்தெடுத்துக் கொள்ளாத வரை, சொத்துக்களையும் முதலீடுகளையும் உருவாக்கி காப்பாற்றுவதே நல்லதொரு விஷயம் என்பதை புரிந்து கொள்ளாத வரை, நீங்கள் எப்போதுமே எனக்கு ஏன் பற்றாக்குறையாகவே இருக்கிறது என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டியது தான் என்று சொல்லி முடிக்கிறார் ஆசிரியர்.

பணத்தின் அருமையையும் அதை எப்படி சேர்க்க வேண்டும் என்பது குறித்தும் நெத்திப் பொட்டில் அடிக்கிற மாதிரி நச்சென்று சொல்லும் இந்த புத்தகத்தை அனைவரும் அவசியம் ஒருமுறை படிக்க வேண்டும்.