யாழில் ரணில்

யாழ். மாவட்ட செயலக நிர்வாகக் கட்டடத் தொகுதி இன்று (சனிக்கிழமை) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டு, பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

புதிய நிர்வாக அலுவலகத்தை திறந்து வைக்கும் முகமாக யாழ். சென்ற பிரதமருக்கு அங்கு பொன்னாடை போர்த்தி தமிழ் கலாச்சார முறைப்படி பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தமிழ் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையிலான வாத்தியங்கள் முழங்க பிரதமர், மாவட்ட செயலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டுதலின் கீழ் நிர்மாணிக்கப்பட புதிய நிர்வாகக் கட்டடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டு, பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் மற்றும் யாழ். மாவட்ட இணைப்புக்குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்டனர்.