அமெரிக்க ஒபன்: நடப்பு சாம்பியன் ஜோகோவிச் கனவு தகர்ந்தது!

அமெரிக்க ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச்சை வீழ்த்தி வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலகின் ‛நம்பர்-1' வீரர் செர்பியாவின் ஜோகோவிச் உடன் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா மோதினார்.

நடப்பு சாம்பியன் ஜோகோவிச் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தாலும், கடந்த ஆண்டு நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச்சை வீழ்த்தி வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் வென்றதால் வாவ்ரிங்கா மீதும் எதிர்பார்ப்பு நிலவியது.

முதல் செட்டை 6-7 என்ற கணக்கில் போராடி இழந்த வாவ்ரிங்கா, அடுத்த மூன்று செட்களையும் கைபற்றி, ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்தார். ஜோகோவிச் காலில் ஏற்பட்ட காயம் அவருக்கு பின்னடைவாக அமைந்தது. முடிவில் 6-7, 6-4, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற வாவ்ரிங்கா, தனது முதல் யு.எஸ்., ஓபன் கோப்பையை கைபற்றினார்.