கிடைத்த பரிசுத் தொகையை தங்க மகன் மாரியப்பன் என்ன செய்யப் போகிறார்?

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தான் படித்த பள்ளிக்கு நிதியுதவி செய்யவிருப்பதாக அவரின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

பிரேசிலில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில், இந்தியா சார்பில் தமிழத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று, இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.

இதனால் அவருக்கு மாநில அரசு 2 கோடியும், மத்திய விளையாட்டு அமைச்சகம் 75 லட்சமும் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சிலரும் பரிசுத்தொகைகளை அறிவித்தனர்.

வரும் 22 ஆம் திகதி நாடு திரும்பும் மாரியப்பன், அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டத்திற்கு செல்கிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பலரும் காத்துள்ளனர்.

இந்நிலையில் மாரியப்பன் தான் படித்த சேலம் மாவட்டம், ஓமனூர் அருகே உள்ள பெரிய வடகம் பட்டி உயர்நிலைப்பள்ளிக்கு 30 லட்சம் வரை நிதியுதவி செய்ய முடிவு செய்திருப்பதாக மாரியப்பனுக்கு ஆரம்பக் காலத்தில் பயிற்சியளித்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், மாரியப்பனிடம் பேசினேன், அவர் 20 முதல் 30 லட்சம் வரை நிதியுதவி அளிப்பதாக கூறியுள்ளார்.

அவரின் நிதியுதவி பள்ளியின் விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தவும், பள்ளியின் தரத்தை உயர்த்தவும் பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.