26 முன்னாள் போராளிகளுக்கு முதற்கட்டமாக விஷ ஊசிப் பரிசோதனை

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் பலரின் திடீர் மரணங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசினால் பிடிக்கப்பட்டு புனர்வாழ்வு பெற்ற  26 முன்னாள் போராளிகளுக்கு முதற் கட்டமாக விஷ ஊசிப் பரிசோதனை இடம்பெறவுள்ளது. 

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் இந்த சிறப்பு மருத்துவ பரிசோதனைகளுக்கு முதற்கட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் 9 முன்னாள் போராளிகளும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா 7 முன்னாள் போராளிகளும், வவுனியா மாவட்டத்தில் 3 முன்னாள் போராளிகளும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.

மன்னார் மாவட்டத்தில் எந்தவொரு முன்னாள் போராளியும் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளவில்லை.

அதேவேளை முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனை இன்று கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா பொது மருத்துவமனைகளிலும்,யாழ். போதனா வைத்தியசாலையிலும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.