தோல்விக்கு இதுதான் காரணம்? சந்திமால் புலம்பல்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் சகலதுறை வீரர்களின் பங்களிப்பு இல்லாமல் போனதால் தோற்க நேரிட்டதாக இலங்கை அணித்தலைவர் சந்திமால் விளக்கம் அளித்துள்ளார்.

இலங்கை- அவுஸ்திரேலிய அணிகள் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் நேற்று தம்புள்ளையில் நடந்த 4வது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய தொடரை 3-1 என கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் தனன்ஜெய டி சில்வா (76) தவிர மற்றவர்கள் சொற்ப ஓட்டங்களே எடுத்தனர். அணித்தலைவர் மேத்யூஸ் (40) சிறப்பாக ஆடி வந்த நிலையில் பவுன்சர் பந்தில் காயமடைந்து வெளியேறினார்.

இதுவும் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் நேற்றையப் போட்டியில் சந்திமால் தலைவராக செயல்பட்டார்.

நேற்றைய போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து சந்திமால் கூறுகையில், நேற்றையப் போட்டியில் சகலதுறை வீரர்கள் சிறப்பாக செயல்படாமல் போனது தோல்விக்கு முக்கிய காரணம்.

தவிர, அணித்தலைவர் மேத்யூஸ் அணிக்கு முக்கியமானவர். ஆனால் அவர் காயம் காரணமாக பாதியில் வெளியேறியதும் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது என்று கூறியுள்ளார்.

மேலும், அடுத்தப் போட்டியில் மேத்யூஸ் விளையாடாத பட்சத்தில், புதிய வேகப்பந்து வீச்சாளர் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் சந்திமால் தெரிவித்துள்ளார்.