விச ஊசி விவகாரம்! சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வைத்திய அதிகாரிகள் தமிழ்த்தேசத் துரோகிகளாக மாறும் அபாயம்!!

புனர்வாழ்வுக்குச் சென்ற போராளிகள் பலர் மர்மமான முறையில் நோய்வாய்ப்பட்டு இறந்து வருவது தொடர்பாக தற்போது பரபரப்பாக பேசப்பட்டுவருகின்றது. புனர்வாழ்வு முகாமில் வைத்து அவர்களுக்கு விச மருந்து கொடுக்கப்பட்டதாகவும் விச ஊசி போடப்பட்டதாகவும் ஊடகங்கள் தொடங்கி அரசியல்வாதிகள் வரை அனைத்துத் தரப்பாலும் முன்னிலைப்படுத்தப்பட்ட விவகாரமாக மாறிவிட்டது. இதற்காக முன்னாள் போராளிகளைப் பரிசோதிப்பதற்காக வடமாகாணத்தில் பிரபல வைத்தியர்களான இருவர் வடக்கு மாகாண முதலமைச்சரால் நியமிக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இது தொடர்பாக எனது மனதை நெரும் விடயங்கள், சந்தேகங்கள், எனது சிற்றறிவுக்கு எட்டிய சில தகவல்கள், வைத்தியப்பரிசோதனைகள் பற்றிய எனக்குத் தெரிந்த சம்பவங்கள் எல்லாவற்றையும் தொகுத்து இங்கு தந்துள்ளேன்.

கடந்த சில வாரங்களுக்கு முன் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றியமை தொடர்பாக அரசாங்கத்திற்கு ஆதரவானதாகக் கருதப்படும் சில சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதே போல் வடக்கு மாகாணசபை போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரனும் சிவமோகனது கருத்தை வழிமொழிவது போல் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவான கருத்தாக எண்ணப்படும் சில கருத்துக்களை வடக்கு மாகாணசபையில் தெரிவித்திருந்தார்.

முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றியமை என்பது ஒரு பொய்யான தகவல் என்பதே இவர்கள் இருவரது கருத்துக்களின் சாராம்சமாகும்.

முன்னாள் போராளிகள் 100 மேற்பட்டோர் நோய்களுக்கு உட்பட்டு இறந்து போனது என்பது சாதாரண விடயமல்ல.
இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட நல்லிணக்க பொறிமுறைக்கான கருத்துக் கோரல் பதிவு ஒன்றில் முன்னாள் போராளி ஒருவர் துணிச்சலாக போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.

ஆகவே இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த சிவமோகன் மற்றும் டெனீஸ்வரன் ஆகியோர் அரசாங்கத்திற்கு ஆதரவானவர்களா? என பலரும் சந்தேகம் கொள்வதில் தவறில்லை எனக் கருதலாம்.

முன்னாள் போராளிகளின் தற்போதைய நிலையை எண்ணும் போது அவர்கள் உயிருடன் இருப்பதை விட இறப்பது எவ்வளவோ மேல் எனக்குத் தோன்றுகின்றது.

திருமணம் முடித்த முன்னாள் போராளிகளின் மனைவி, பிள்ளைகள் அப் போராளியைப் பார்த்து அப்பா உங்களுக்கும் இப்படி ஏற்படுமா? என கண்கலங்கும் போது அப் போராளியின் மன திடம் உடைந்தே அவன் நடைப்பிணமான நிலைக்கு உட்பட்டுவிடுவான். இதை விடக் கொடுமை புனர்வாழ்வு அளிக்கப்பட்ட திருமணமாகாத போராளிகளின் நிலை. அவர்களைத் திருமணம் செய்ய யார் துணிவார்கள். ஆகவே முதலில் முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ உதவிகளிலும் பார்க்க மனநலம் மிக்க , மன தைரியம் நிறைந்த ஆறுதல் தேவை.


தொடர்ச்சியாக புகையிலை பாவிப்பவர்கள் மற்றும் தொடர்ச்சியாக சாராயம் அருந்துபவர்கள் அனைவரும் அந்தக் காரணங்களால் சாவடைவதில்லை. எனக்குத் தெரியவே குடித்து தெருவில் கிடப்பவர்கள் எல்லாம் 80 வயதுவரை வாழ்ந்துவிட்டே இறந்துள்ளனர். குடிப்பவர்கள் அனைவரும் அந்தக் காரணத்தால்தான் இறப்பார்கள் என மருத்துவம் சொல்வதில் எந்தவித உண்மையும் இல்லை. குடிப்பவர்களின் மரபணுக்களைப் பொறுத்து அவர்களது உடல்நிலையில் மதுசாரம் தாக்கம் புரிகின்றது. சிறப்பான மரபணுப் பிணைப்புள்ளவர்களுக்கு குடியினால் ஏற்படும் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்பது எனது சிந்தனையாகும். அதே போல் எந்த ஊசி ஏற்றினாலும் ஆட்லறிகளுக்கே பயப்படாது மரபணுக்களிலேயே விடுதலைச் சிந்தனையைக் கொண்டு களத்தில் நின்ற போராளிகளுக்கு எந்த ஊசியும் துாசியாக அமையும்.

இதே வேளை குறித்த போராளிகளுக்கு மெல்லக் கொல்லும் விச மருந்தேற்றல் சம்பவம் இடம்பெற்றதா? என்பதையும் அவ்வாறு இடம்பெற்றிருந்தால் அவற்றை எமது மாகாணத்தைச் சேர்ந்த வைத்தியநிபுணர்கள் அல்லது வேறு எந்த நாட்டைச் சேர்ந்த வைத்திய நிபுணர்கள் போன்றவர்களால் கண்டுபிடிக்கும் திறமை உள்ளதா? என்பது சந்தேகத்துக்குரிய ஒன்றாகும்.

சாதாரண ஒருவர் வைத்தியசாலையில் தனது நோய்க்காக கதிர்ப் பரிசோதனை (எக்ஸ்ரே) செய்துள்ளார் என வைத்துக் கொள்வோம். சில நாட்களின் பின்னர் அவர் கதிரியக்கப்பரிசோதனை செய்தார் என்பதை வைத்தியத்துறையைச் சேர்ந்தவர்கள் அவரது உடலைப் பரிசோதித்து அறிந்து கொள்ள முடியுமா?

போலியோ சொட்டு மருந்து கொடுத்த பிள்ளைக்கு போலியோ ஒரு போதும் வராது என சொல்கின்றார்கள். அவ்வாறு போலியோ சொட்டுமருந்து கொடுத்த பிள்ளையை நீங்கள் ஒருவருடத்தின் பின்னர் ‘குறித்த பிள்ளைக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்ததா? என அப் பிள்ளையின் உடலைப் பரிசோதித்து அறிவீர்களா? ‘ ஒரு போதும் வைத்திய அதிகாரிகளால் அறிய முடியாது...

விச ஊசி ஏற்றியதாக கருதப்படும் நபரினது மனித கலன்களின் (Human cell) செயற்பாடுகளையும் மாறுதல்களையும் சாதாரண ஒரு வைத்திய அதிகாரியால் கண்டு பிடிப்பது மிகக் கடினமாகும்.

இவ்வாறான பரிசோதனைகளை மருத்துவ ஆராய்ச்சியாளர்களே கண்டுபிடிக்க முடியும். அதுவும் திட்டமிட்டு ஒரு ஆராய்ச்சியாளரால் தயாரிக்கப்பட்ட விச மருந்து ஏற்றும் செயற்பாட்டை கண்டு பிடிப்பது முயற்கொம்பே.

இதே போலவே போராளிகளுக்கு விச மருந்து கொடுக்கப்பட்ட சம்பவத்தை நீங்கள் அப் போராளிகளின் உடலைப் பரிசோதித்து ஒரு போதும் அறிந்து கொள்ள முடியாது. நிச்சயம் நீங்கள் தோல்வியே அடைவீர்கள்.

இவ்வாறு நீங்கள் பரிசோதித்து விட்டு அறிக்கை சமர்ப்பிக்க முடியாது. நச்சு ஊசி, நச்சு மருந்து ஏற்றப்பட்டு இறந்ததாக சொல்லப்படும் போராளிகளின் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளை நீங்கள் முதலில் சேகரித்து அவர்கள் என்ன நோயினால் இறந்தார்கள் என அறிய வேண்டும்.

அத்துடன் நீங்கள் மருத்துவ தர்க்க ரீதியாகவே (லொஜிக்) இந்த விடயத்தை ஆராய்ந்து கண்டு பிடிக்க வேண்டும். மருத்துவமும், விஞ்ஞானமும் அவ்வாறே பல இடங்களில் தொழில்பட்டுள்ளது.

உங்களால் அப் போராளிகளின் குருதி அமுக்கத்தையும், சிறுநீரகச் செயற்பாடு, இதயச் செயற்பாடு, இரத்தத்தில் சக்கரை, புற்றுறோய்க் கட்டிகள், ஈரல், நுரையீரல் போன்றவற்றின் செயற்பாடுகளை மட்டுமே உங்களது கருவிகள் மூலம் கண்டு பிடிக்கலாம். ஆனால் நச்சு மருந்து ஏற்றப்பட்டதை உங்களால் கண்டு பிடிக்க முடியாது.

புற்று நோய் ஏற்பட்ட பின்னரே ஒரு நபர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை நீங்கள் கண்டறிவீர்கள். அந் நபருக்கு புற்றுறோய் வரப் போகின்றது என்பதை உங்களுக்கு முன்கூட்டியே சொல்ல முடியுமா?

புகையிலை, மதுபாவனை போன்றவற்றைப் பாவித்தால் புற்றுநோய் வரும் என விஞ்ஞானிகளே தர்க்கரீதியாக ஆராய்ச்சி ரீதியாக கண்டு பிடித்துள்ளார்கள். வைத்திய நிபுணர்கள் கண்டு பிடிக்கவில்லை. விஞ்ஞானிகள் தர்க்கரீதியான ஆராய்சிகள் மூலம் பலரை பரிசோதித்து கண்டு பிடித்ததை வைத்தியநிபுணர்கள் மக்களுக்கு தெரிவிக்கின்றார்கள். மருந்து கொடுக்கின்றார்கள்.

போலியோ சொட்டுமருந்து கொடுக்கப்பட்ட பிள்ளைக்கு, எவ்வாறு அந்தச் சொட்டு மருந்து அந்தப் பிள்ளையின் உடலுக்குள் இருந்து போலியோ நோய்க்கான கிருமியை எதிர்க்கின்றதோ அதே போல் சில மருந்துகள் உடலுக்குள் செலுத்தப்பட்டால் குறிக்கப்பட்ட சில நோய் எதிர்ப்பு தன்மைகளை இல்லாது செய்யலாம், மரபணுக்களை மாற்றி புற்றுநோய்களை உருவாக்கும் செயற்பாட்டைச் செய்யலாம், சில நோய்க்கிருமிகளை உடலுக்குள் உண்டாக்குவதற்கான ஊக்கிகளைகத் தொழிற்படாலாம். வைத்தியர்களான நீங்கள் மருத்துவர்களே தவிர ஆராய்சியாளர்கள் அல்லது விஞ்ஞானிகள் அ

இதற்கு ஒரு சின்ன உதாரணம் தருகின்றேன்.

ஒருவருடைய காணியை அத்துமீறிப் பிடித்து சண்டித்தனம் காட்டிய சண்டியர் ஒருவனைப் பற்றி 2003ம் ஆண்டளவில் யாழ் பொலிஸ் நிலையம், விடுதலைப்புலிகளின் அரசியல்துறைச் செயலகம் போன்றவற்றிலும் முறையிட்டு எந்தவித பலனும் கிடைக்காத ஒரு அப்பாவியை நீண்ட நாட்களின் பின்னர் சந்தித்துள்ளார் ஒரு நண்பர்.

சண்டியன் அத்து மீறி பிடித்ததாக கூறிய காணிக்குள் அவர் நின்றிருந்தார். ‘சண்டியன் காணியை விட்டுவிட்டானோ‘ எனக் கேட்டதற்கு அவர் கூறிய பதில் இதுதான் ‘ நல்லுார் பண்டாரிக்குளம் பகுதிக்கு அண்மையில் செய்வினையில் பெயர் போன ஒருவர் இருக்கின்றார். அவரிடம் சென்று மருந்து ஒன்று வாங்கிச் சென்று அதை அந்தச் சண்டியனுக்கு இன்னொருவன் மூலம் சோடாக்குள் விட்டு கொடுத்தேன். எண்ணி ஒரு கிழமைக்குள் அவனுக்கு பாரிசவாதம் வந்து படுக்கையாக் கிடந்து ஆறு மாதத்தில் செத்துட்டான்‘ என்று அந்த அப்பாவி சொன்னார். ( இவர் அப்பாவியா என நீங்கள் கேட்கலாம்..) இது நுாறு வீதம் உண்மைச் சம்பவம்.

குறித்த செய்வினை செய்பவர் எனக் கருதப்படுபவர் அப்பகுதில் தற்போதும் இருக்கின்றார். கடந்த சில வருடங்களுக்கு முன் யுவதிகளுக்கு கருக்கலைப்பு செய்து பொலிசாரிடம் அகப்பட்டவர். ஆனால் தற்போதும் கருக்கலைப்பு செய்து வருகின்றார். கருவுற்ற பெண்ணுக்கு நாள் குறித்து அவர் கொடுக்கும் மருந்தில் குறித்த கரு அந்த நாட்களுக்குள் அழிவடைந்து விடுகின்றது .

எனக்கு செய்வினை சூனியத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் அந்த சண்டியனுக்கு கொடுக்கபட்ட மருந்தும் தற்போதும் கர்ப்பக் கலைவுக்கு கொடுக்கப்படும் மருந்தும் என்ன என்பது கண்டறியப்பட வேண்டும்.

Dimethyl mercury எனும் பாதரசம் மனிதர்களை மெல்லக் கொல்லும் மிக முக்கிய நச்சுப் பொருளாகும். 1996 ஆம் ஆண்டில், டார்ட்மவுத் கல்லூரியில் ஒரு இரசாயனவியல் பேராசிரியர், நியூ ஹாம்சயர் என்பவர் இந்தப் பாதரசத்தில் 0.01 மீ.லீ தவறுதலாக அவரது உடலில் கலந்ததால் பல ஆண்டுகளுக்குப் பின்னர் மரணமானர். http://articles.latimes.com/1997/sep/14/news/mn-32049

முன்னாள் போராளிகளின் இறப்புப் போல் நடந்த மேற் குறிப்பிட்ட சம்பவத்திற்கும் முன்னாள் போராளிகளின் சம்பவத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கலாம் என நம்புகின்றேன்.

அதே போல் ஆவர்த்தண அட்டவனையில் 84ம் இடத்தில் உள்ளது Polonium எனும் மிகக் கொடிய கதிரியக்க மூலகம் ஆகும். இதுவும் ஒருவனை திட்டமிட்டு புற்றுநோய் உட்பட பல நோய்களை உருவாக்கி பல ஆண்டுகளின் பின்னர் கொலை செய்யும் கொடூரப் பயங்கரவாதி மூலகமாகும். இதனை பாவித்து Alexander Litvinenko எனும் மிகத் திறமை வாய்ந்த ரஸ்சிய உளவாளியை மெல்லக் கொலை செய்தார்கள் என குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கும் நடைபெற்றுள்ளது.

Botulinum Toxin எனும் மெல்லக் கொல்லும் நஞ்சுஇரசாயணம். இதை உட் கொண்டால் உடனடிப் பாதிப்பு இல்லை. சிறிது காலத்தின் பின்னர் உடலில் ஏற்படும் காயங்களால் கிருமி தொற்று ஏற்பட்டால் அக் கிருமி உடலில் பெருக வாய்ப்பளித்தல் நுரையிரலைச் சேதமாக்கல் போன்றனவற்றை இந்த மருந்து திறம்படச் செய்கின்றது.

அமெரிக்கா, சீன உட்பட்ட நாடுகள் தமது எதிரிகளை பனிப்போர் முறையில் கொல்வதற்கு பல்வேறு ஆராய்சிகளை மேற்கொண்டு அந்த ஆராய்சிகளில் வெற்றியும் பெற்றுள்ளனர். அந்த ஆராய்ச்சிகளுக்கு எங்கள் போராளிகளும் பலிக்கடாவாக்கப்பட்டார்களா?? என்பது கண்டறியப்பட வேண்டும்.

இந்த விடயமானது இலங்கை அரசாங்கத்திற்கும் ஒரு முக்கிய சவாலும். தனது பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கமுமாகும். முன்னாள் போராளிகளுக்கு நச்சு ஊசி, இரசாயண உணவு வழங்கப்பட்ட சம்பவங்கள் பொய் என இலங்கை அரசாங்கம் நிரூபிக்க வேண்டும்.

இராமன் சீதையை தீக்குளிக்க செய்து அவளது கற்பை அனைவருக்கும் காட்டிய போது அங்கு சீதையின் கற்பு மட்டுமல்ல. இராவணணின் போற்றுதற்குரிய கற்பும் வெளிப்பட்டது.

இதே போல் முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றியது, விச உணவுகள் வழங்கியவை தொடர்பான விசாரணைகளில் உண்மை இல்லை எனின் இலங்கை அரசாங்கத்தின் மதிப்பும் உயரும்.

முன்னாள் போராளிகளின் விச ஊசி விடயத்தை மிக அவதானமான ஆய்வுகள் மூலமே நிரூபிக்க முடியும். சாதாரண உடற்பரிசோதனைகளால் அவ்வாறு செயற்படுத்த முடியாது.

அவ்வாறு உடற்பரிசோதனைக்கு அவர்கள் எல்லோரையும் உட்படுத்தி அவர்களுக்கு எந்தவித நோயும் இல்லை என வடக்கு முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் கூறிய பின்னர் யாராவது ஒரு முன்னாள் போராளி திடீர் நோய்வாய்ப்பட்டு இறந்தாரானால் குறித்த வைத்தியர்களும் அவர்களை நியமித்த முதலமைச்சரும் தமிழ்த்தேசத் துரோகிகள் என்று பெயர் கொண்டு அழைக்கப்படுவார்கள்.

இந்தப் பதிவில் நான் குறிப்பிட்டது மிகச் சொற்பமே.... போராளிகளின் விச ஊசி விடயம் தொடர்பாக ஏராளமானவற்றை என்னால் குறிப்பிட்டு கூற முடியும். ஆனால் அவற்றை வாசிக்க உங்களால் முடியாது.....

நன்றி

த.வசந்தரூபன்