பரிசோதனை எலிகளாக மாற்றப்பட்டு ஊசி ஏற்றிக் கொல்லப்படும் விடுதலைப் புலிகள்

உலக அரங்கில் தற்போது மிகவும் பாரதுாரமாகக் கருதப்படும் வருவது மனித உரிமை மீறல்களே. உலக நாடுகளில் அந் நாட்டு அரசாங்கங்களாலும் தீவிரவாத அமைப்புக்களாலும் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை அவதானிப்பதற்கும் அவ்வாறு மனித உரிமை மீறல்கள் நடைபெற்றால் அவற்றை தடுத்து நிறுத்துவதற்கும் தற்போது பல்வேறு உலக அமைப்புக்கள் போராடி வருகின்றன.

உலக நாடுகள் பலவற்றில் தற்போதும் மரண தண்டனை கொடுக்கும் நடைமுறைகள் உள்ளன. பல நாடுகளில் தனி நாடு கேட்டுப் போராடும் குழுக்களையும் உள்நாட்டுக் கலவரங்களை ஏற்படுத்தும் குழுக்களையும் கட்டுப்படுத்துவதற்கு குறித்த நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் பல கொடுமையான மனித உரிமை மீறல்களை தங்களது நாட்டு மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டுள்ளன.  இவற்றுக்கு எதிராக மனித உரிமை அமைப்புக்கள் நடாத்தும் தொடர் போராட்டத்தால் அந் நாடுகள் பல சிரமங்களை எதிர் கொண்டுள்ளன. ஆனால் இவற்றை எல்லாம் பொருட்படுத்தாது தாம் நினைத்தவற்றைச் செய்து வருகின்றன சில நாடுகள். அந்த நாடுகள் வரிசையில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

உலக வல்லரசாகவும் உலக நாட்டாமைக்காரனாகவும் செயற்படும் அமெரிக்காவில் இடம் பெறும் மனித உரிமை மீறல்கள் மிகவும் இரகசியத் தன்மையானவை. அமெரிக்காவில் போதைப் பொருள் கடத்தல்காரர்களாகவும் தீவிரவாதிகளாகவும் அமெரிக்க இராணுவத்தின் இரகசியங்களை வெளியிட்டவர்களாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு ஏராளமானவர்கள் கைது செய்யப்படுகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்  அமெரிக்க நீதிமன்றங்களில் நிறுத்தப்படும் போது அவர்களில் பலர் குற்றச்சாட்டுக்கள் நிரூப்பிக்கப்படாது தண்டனையில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்கள் விடுவிக்கப்பட்டு 3 வருடங்களுக்கிடையிலேயே உயிரிழந்து விடுகின்றதாக 2007ம் ஆண்டு அமெரிக்க நீதிமன்றத்தில் போதைப்பொருள் சந்தேக நபருக்கு ஆதரவாக ஆயரான சட்டத்தரணி ஒருவர் திடுக்கிடும் தகவலைத் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் இந்த தகவல்கள் அப்படியே அமுக்கப்பட்டன. இதே போலவே சீன உட்பட பல நாடுகளில் அரசுக்கு எதிரானவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னர் குறுகிய காலங்களில் இறந்து விடுவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

உலக அரங்கில் தற்போது ஆயுத உற்பத்தியை விட  உயிரியல் ஆயுத உற்பத்திகளில் பல நாடுகள் தங்கள் கவனத்தைச் செலுத்தியுள்ளன. ஆயுதங்களை விட ஆபத்தான உயிரியல் ஆயுதங்களை பல்வேறு வடிவங்களில் தமக்கு எதிரானவர்களுக்கு பிரயோகிப்பதற்கான நடவடிக்கைகளை அந் நாடுகள் எடுத்து வருகின்றன.

ஜேர்மனியில் தம்மால் பிடிக்கப்பட்ட யுத்தக் கைதிகளை வைத்து எவ்வாறு ஹிட்டல் தனது கொடூர ஆயுத பரிசோதனைகளை மேற்கொண்டானோ அதற்கு நிகராக பல நாடுகளும் தம்மால் பிடிக்கப்பட்ட குற்றவாளிகள் மீது இவ்வாறான உயிரியல் ஆயுதங்களைப் பரிசோதித்து வருவதாக சந்தேகம் தோன்றியுள்ளது.

 இதே நிலையே தற்போது இலங்கையில் இறுதி யுத்தத்தில் இலங்கை  அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட விடுதலைப் போராளிகளுக்கும் நடந்துள்ளதா என சந்தேகிக்க தோன்றுகின்றது.

இறுதி யுத்தத்தின் பின்னரான புனர்வாழ்வின்போது தமக்கு இரசாயனம் கலந்த உணவுகள் வழங்கப்பட்டதோடு சந்தேகத்திற்கிடமான ஊசி மருந்துகளும் ஏற்றப்பட்டதாக முன்னாள் போராளி ஒருவர் சாட்சியமளித்துள்ளார். இதனால் தம்மால் சுறுசுறுப்பாக பணியாற்றமுடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் ஒரு முனைநாள் போராளி. தடுப்பால வந்த பிறகு நாங்கள் யுத்தங்களை விட்டு ஒதுங்கி இருக்கிறம். சொன்னாலும் சொல்லாட்டாலும் உவங்கள் எங்களிற்கு இரசாயண உணவுகளைத் தந்திருக்கிறாங்கள் என்பது எங்களிற்கு விளங்குகின்றது. நான் முன்பு 100 கிலோ தூக்கி எத்தினயோ கிலோமீற்றர் ஓடுற எனக்கு ஒரு பொருளைக்கூட தூக்க முடியவில்லை.

கண் பார்வை குறைகின்றது. எங்களிற்கு ஏதோ நடந்திருக்கிறது என்பது மட்டும் விழங்குகின்றது. ஏன் தடுப்பு மருந்து முழுப்பேருக்கும் ஏற்றினவங்கள். ஊசியைக் கொண்டுவந்து போடுவாங்கள். என்ன தடுப்பிற்காக ஏற்றினார்கள் என்று எமக்குத் தெரியாது. ஊசி ஏற்றிய அன்று மாலையே ஒரு போராளி இறந்துவிட்டார் என ஒட்டிசுட்டானில் நடைபெற்ற மக்கள் கருத்தறியும் அமர்வில் பங்கேற்ற முன்னாள் போராளி ஒருவரே இவ்வாறு சாட்சியமளித்துள்ளார்.

இது சாதாரணமாகக் கருதப்படக்கூடிய ஒரு விடயமல்ல. விடுதலைப்புலிப் போராளிகளை உயிரியல் ஆயுதத்தைப் பரிசோதிப்பதற்கான தமது ஆய்வுக்காக ஏதாவது ஒரு நாடு பயன்படுத்தியுள்ளதாக சந்தேகம் தோன்றியுள்ளது. குறிப்பாக சீன அரசு இவ்வாறான ஒரு வேலையைப் பார்த்திருக்ககூடும் என பலரும் கருதுகின்றனர்.

இலங்கையில் வன்னியில் நடைபெற்ற கொடூர இன அழிப்பு யுத்தத்தில் பல  நாடுகளும் தங்களது ஆயுதங்களில் ஆற்றலைப் பரிசோதிப்பதற்கான களமாக வன்னியைப் பாவித்துள்ளமையும் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளது. மனிதனுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் இரசாயன ஆயுதங்கள் தொடங்கி  பல்வேறு தரப்பட்ட இராணுவ உற்பத்திகளையும் வன்னியில் பரிசோத்தித்துள்ள தகவல்கள் இன்னும் சில காலத்தின் பின்னர் வெளியாகும்.

தற்போது இலங்கை அரசாங்கத்தால் வன்னியில் வைத்துப் பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் திடீர் இறப்புக்கள் குறித்து உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுதல் அவசியமாகும். அத்துடன் விடுவிக்கப்பட்டு தற்போது சமூகத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகளும் அவசியம் செய்யப்படுதல் வேண்டும். குறித்த மருத்துவப் பரிசோதனைகள் வெளிநாட்டு மருத்துவ நிறுவனம் ஒன்றினால் நடாத்தபடுதல் அவசியம். இலங்கையில் உள்ள மருத்துவர்களை வைத்து குறித்த மருத்துவப் பரிசோதனைகளை நடாத்துவதில் நம்பிக்கை ஏற்படப் போவதில்லை.

இலங்கையில் இறுதி யுத்தத்தில் இடம் பெற்ற போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச நீதிபதிகள் கொண்ட விசாரணையை இலங்கை ஏற்றுக் கொள்ளாது உள்நாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணை செய்வதற்கு முயன்று வருகின்றது. இதுவே சந்தேகத்தை ஏற்படுத்தி வருகின்றது. எந்தவித போர்க்குற்றமும் செய்யவில்லையாயின் வெளிநாட்டு நீதிபதிகள் வந்தாலென்ன, உள்நாட்டு நீதிபதிகள் வந்தாலென்ன என இலங்கை அரசாங்கம் இருக்கவேண்டியதுதானே? ஆனால் குற்றம் நடந்தபடியால்தான் வெளிநாட்டு நீதிபதிகள் வந்தால் ஆபத்து என உணர்ந்து உள்நாட்டு நீதிபதிகளை வைத்து சமாளிக்க முயல்கின்றது இலங்கை அரசு.  அதே போல் மருத்துவப் பரிசோதனைகளும் உள்நாட்டு மருத்துவர்களைக் கொண்டு செய்வதில் பிரயோசனம் இல்லை என்றே தோன்றுகின்றது.

இலங்கை அரசாங்கத்தால் பிடிக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட ஒவ்வொருவரையும், வெளிநாட்டு மருத்துவர் குழு ஒன்றின் மூலம் பரிசோதிப்பதற்கு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உட்பட்ட தமிழர் நலன்களில் அக்கறை கொண்டவர்கள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.