வடக்கில் போதைப் பொருள் கடத்தலை தடுக்க இலங்கை - இந்திய கூட்டு நடவடிக்கை அவசியம் - டக்ளஸ்

வடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் கடத்தும் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசும், இந்திய அரசும் இணைந்து, ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுத்தால் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் செயலாளர் நாயகம் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடக்கில், குறிப்பாக யாழ் குடாநாட்டின் கரையோரப் பகுதிகளினூடாக நம் நாட்டுக்கு தற்போது அதிகளவில் போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு, அவற்றில் பெரும்பாலானவை தென் பகுதிக்குக் கொண்டு வரப்படுவதாக அறிய முடிகிறது. இதனூடாக யாழ் குடா நாட்டில் போதைப் பொருள் பாவனையானது படிப்படியாக அதிகரித்து வரும் நிலையே காணப்படுகிறது.

போதைப் பொருள் பாவனை காரணமாக யாழ் குடாநாட்டில் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்ற சமூகச் சீர்கேடுகள் குறித்து பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகள் தொடரவே செய்கின்றன என்பதை அறியக்கூடியதாக உள்ளது.

இவ்வாறான கடத்தல்களில் ஓரளவு பொருட்கள் பொலிஸாரினால் பிடிக்கப்படுகின்ற போதிலும், அவை அனைத்தும் தரைப் பகுதிகளில் வைத்தே பிடிக்கப்படுகின்றன. எனவே, இவற்றை கடலில் வைத்தே பிடிப்பதற்கான ஏற்பாடுகளை கடற் படையினரின் ஊடாக பரவலாக்கப்படுவது அவசியமாகும்.

அதேநேரம் இந்தியக் கரையோரப் பகுதிகளினூடாக இவ்வாறான போதைப் பொருட்கள் குறிப்பாக கேரளா கஞ்சா போன்றவை அதிகளவில் கடத்தப்படுவதாகவும் அறிய முடிகிறது.

எனவே, இதனைத் தடுப்பதற்கு இந்திய அரசின் உதவியும் பெறப்படுதல் அவசியமாகும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.