கிளிநொச்சியில் முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் தலைமையில் இந்த குழுக்கூட்டம் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அறிமுக உரை வழங்கிய நிலையில் விவசாயம், நீர்ப்பாசனம், சுகாதாரம், கல்வி, காணி போன்ற பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு பல தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முக்கியமாக வீட்டுத்திட்டம் கிடைப்பெற்றுள்ள நிலையில் அதற்கான மணல் பெற்றுக்கொள்வதில் பயனாளிகள் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

எனவே பிரதேச செயலாளர்களுக்கு வீட்டுத்திட்டத்திற்கு தேவையானளவு மணலை பெற்று வீட்டு திட்ட பயனாளிகளுக்கு வழங்குவது என்ற தீர்மானமும்,செஞ்சோலை காணியினை தற்போது அங்கு குடியேறியுள்ள செஞ்சோலை பிள்ளைகளுக்கே பகிர்ந்தளிக்க வேண்டும் போன்ற தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன. 

மேலும் மாவட்டத்தில் ஒவ்வொரு துறைகளிலும் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திகள், தேவைகள், பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளன. 

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், பிரதேசசபைகளின் தவிசாளர்கள், கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர், வட மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.