ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவைச் சந்திக்கிறது ஈபிடிபி- டக்ளசுக்கு அமைச்சர் பதவி?

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி குழுவினருக்கும் இடையில், அடுத்த வாரம் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது, ஈபிடிபியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடப்படும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்தும் இந்தச் சந்திப்பில் பேச்சு நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீரவை, ஈபிடிபி சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தது.

இதன்போது, எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து செயற்பட ஈபிடிபி விருப்பம் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்திருந்த ஈபிடிபி, அந்தக் கட்சியின் வெற்றிலைச் சின்னத்திலேயே தேர்தல்களிலும் போட்டியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.