உலகம் முழுவதும் சுற்றிவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு! நாடாளுமன்றத்தில் டக்ளஸ் சரமாரி கேள்விகள்

அரசியல் பலத்தை தம்வசம் வைத்துக்கொண்டு உலகெல்லாம் தமிழ் தேசிய கூட்டமைப்பு சுற்றி வர நினைப்பது ஏன் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் ஆறாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன் போது பேசிய அவர்,

குடியிருக்க ஒரு துண்டு நிலமோ குச்சு வீடோ இன்றி வாக்களித்த தமிழ் மக்கள் தவித்திருக்க, தமக்கு மட்டும் ஆடம்பர மாளிகைகையும் சொகுசு வாகனங்களும் கேட்டு பெறுவதை தேசிய நல்லிணக்கம் என்று கூறிவிட முடியுமா?

தென்னிலங்கை தலைவர்களோடு சுயலாப தமிழ் தலைமைகள் மட்டும் கைகுலுக்குவது தேசிய நல்லிணக்கம் அல்ல.

தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வையும், அபிவிருத்தியையும், அன்றாடத் தேவைகளையும், பெற்றுக்கொடுக்க மறந்தவர்கள், அதற்காக கடந்த காலங்களைப்போல் அண்மையிலும் கனிந்து வந்த அரிய வாய்ப்பை பயன்படுத்த மறுத்தவர்கள், இலங்கையில் பெய்கின்ற மழைக்கு ஜெனீவாவில் குடை பிடிக்க போகின்றார்கள்.

கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய் தேடி ஊரெல்லாம் அலைவது போல், பேரம் பேசி எந்த தீர்வையும் பெறவல்ல அரசியல் பலத்தை தம் வசம் வைத்துக்கொண்டு உலகெல்லாம் இவர்கள் சுற்றி வர நினைப்பது ஏன் என்று கேட்டுள்ளார்.