வவுனியாவில் கலைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றம்!

எழு நீ விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்று பல மாதங்கள் கடந்த நிலையில் இது தொடர்பான சர்ச்சைக்கு இன்று வரையிலும் முற்றுப் புள்ளி வைக்கப்படவில்லை என கலைஞர்களால் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு தொடர்பாக எமது செய்தியாளர் வினவிய போது கலைஞர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். 

மேலும் அவர்கள் கூறுகையில்,எழு நீ விருது வழங்கும் நிகழ்வு கடந்த வருடம் டிசம்பர் மாதம் வவுனியா நகரசபையினருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டது.

இதில் விருதுகள் பெற்றுக்கொண்டவர்கள் சிலரிடமிருந்து மண்டபத்தில் வைத்து இறுவெட்டு மற்றும் முழுப்புகைப்படம் என்வற்றிற்காக 1000 ரூபாய் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால், இன்று வரையிலும் இறுவட்டும் மற்றும் புகைப்படங்களும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர். 

பல்வேறு விமர்சனங்களையும் தாண்டி இடம்பெற்ற எழு நீ விருது வழங்கும் நிகழ்வில் இன்று வரையிலும் செலவு தொடர்பான கணக்கறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவில்லை.

நிகழ்வின் ஏற்பாட்டுக்குழுவின் பல்வேறுபட்டோரினால் நிதிகள் கையாளப்பட்டுள்ளதுடன் வரவு செலவுகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளது.

இது தொடர்பாக எழு நீ நிகழ்வின் ஏற்பாட்டுக்குழுவைச் சேர்ந்த ஒருவரை தொடர்பு கொண்ட போது, பணம் பெற்றுக்கொள்ளப்பட்டதை ஏற்றுக்கொண்டதுடன் அனைவரிடமும் பணம் பெற்றுக்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

பணம் வழங்கியவர்களுக்கு இன்னும் சில தினங்களுக்குள் இறுவெட்டு, புகைப்படங்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.