கள்ள காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி

கள்ளக்காதலனுடன் சேர்ந்து சொத்துக்காக கணவரை கொலை செய்த பெண் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கரூர் மாவட்டம், வாழ்வார்மங்கலத்தை அடுத்துள்ளது ஒத்தக்கடை. இந்த ஊரைச் சேர்ந்தவர் காளியப்பன். இவருடைய மனைவி சரண்யா.

இவர்களுக்குத் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை இல்லை. காளியப்பன் அரிசி வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், காளியப்பன் தனது வீட்டின் வெளியே கட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தை அறுத்து அவரை கொலை செய்து விட்டு சிலர் தப்பி சென்று விட்டனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளைத் தேடி வந்தனர்.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பாலசுப்பிரமணி, கருப்பசாமி, திருப்பதி, ஆண்டி, கொலை செய்யப்பட்ட காளியப்பன் மனைவி சரண்யா ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் அவர்கள் 5 பேரும் சேர்ந்து காளியப்பனை கொலை செய்தது தெரியவந்தது.

மேலும், சரண்யாவிற்கும், பாலசுப்பிரமணிக்கும் நீண்ட நாட்களாக கள்ளக்காதல் இருந்து வந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில், சரண்யாவின் தம்பி சக்திவேல், காளியப்பனின் அண்ணன் மகளை காதலித்து வந்தார். அவர்களது திருமணத்திற்கு சக்திவேலின் குடும்பத்தினரும், காளியப்பனின் அண்ணன் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்துவிட்டனர்.

அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டால் சரண்யாவிற்கு குழந்தை இல்லை என்பதை காரணம் காட்டி சொத்துக்களை தனது தம்பிக்கு கொடுத்துவிடுவார்கள் என்ற பயத்தில் இது குறித்து சரண்யா தனது கள்ளக்காதலன் பாலசுப்பிரமணியிடம் கூறினார்.

இதனால், அவர்கள் இருவரும் சேர்ந்து காளியப்பனை கொலை செய்ய திட்டம் தீட்டியதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, காளியப்பனின் ஏடிஎம் கார்டை சரண்யா திருடி, பாலசுப்பிரமணியத்திடம் கொடுத்தார்.

அந்த ஏடிஎம் கார்டு மூலம் பாலசுப்பிரமணியம் பணத்தை எடுத்து, அந்த பணத்தைக் கூலிப்படையினருக்குக் கொடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, காளியப்பன் வீட்டிற்கு வந்ததும், தனது கள்ளக்காதலனுக்கு சரண்யா தகவல் கொடுத்துள்ளார். பின்னர் சரண்யா உள்பட 5 பேரும் ஒன்று சேர்ந்து காளியப்பனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.