கூட்டமைப்பு தமிழர்களை ஏமாற்றிய இரண்டாவது வருடம்! வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தொடர் போராட்டம் மேற்கொள்ளப்படும் கொட்டகைக்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த இரண்டு வருடங்களிற்கு முன்பாக வவுனியாவில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டிருந்த நிலையில் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களை அரசின் பிரதிநிதியாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன சந்தித்திருந்தார்.

மேலும் 2017 பெப்ரவரி 9ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்து தங்கள் பிரச்சினைகள் குறித்துப் பேச ஏற்பாடு செய்வதாக அவர் உறுதியளித்திருந்தார்.

அதற்கமைய உண்ணாவிரதத்தை கைவிட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு பிரதமருடன் சந்திப்பு ஒன்றை அலரி மாளிகையில் ஒழுங்கு செய்திருந்தனர்.

குறித்த சந்திப்பு இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டே இன்றைய தினம் குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சிங்கள தலைமைக்கும், பௌத்தத்திற்கும் அடிமைகளாகிய சுமந்திரனும், சம்பந்தனும், (09.02.2017) ஆம் ஆண்டு அரசிற்கும், காணாமல் ஆக்கபட்ட உறவுகளிற்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் அரசுடன் சேர்ந்து, கூட்டமைப்பும் தமிழர்களை ஏமாற்றிய இரண்டாவது வருடம் இன்று. என்று எழுதப்பட்ட பதாதையை தாங்கியிருந்ததுடன், அமெரிக்க, ஜரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்திய வண்ணம் கோசங்களையும் எழுப்பியுள்ளனர்.

இவர்களது போராட்டம் இன்றுடன் 719 நாட்களாக தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.