வன்னிக்கு ஆசிரியர்களை அனுப்பாது சந்திராசா செய்த திருகுதாளம்!! ஆளுநர் அறிவாரா?

வன்னி வலயங்களில் நிபந்தனை இடமாற்றம் பெற்றுக் கடமையாற்றுவதற்காக ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவது வழக்கமாகும். இவ்வாறு விடுவிக்கப் படுபவர்கள் பட்டியலில் தமக்கு வேண்டியவர்களை நீக்கி, அப்பாவி ஆசிரியர்களை அனுப்புவதில் சில வலயக் கல்விப் பணிப்பாளர்களும், அறிக்கை அரசியல் செய்யும் ஆசிரியர் சங்கங்களும் பெரும் பங்காற்றுகின்றன.

இம்முறை வன்னிக்கு அனுப்பப்பட வேண்டிய 50ற்கும் மேற்பட்ட இளம் ஆசிரியர்களை வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் சந்திரராசா தந்திரமாக மறைத்து திருவிளையாடல் செய்துள்ளார்.

அவருக்கு மிகவும் வேண்டிய பெண் ஆசிரியர்கள், ரியூசனில் கொடி கட்டிப் பறக்கும் ஆண் ஆசிரியர்கள் இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டு, இடமாற்றச் சபையைக் கூட்டாது காதும் காதும் வைத்த மாதிரி வலி.வடக்கு மீள்குடியேற்றப் பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் விடுவிக்கப்பட்ட பலாலி, மயிலிட்டி பாடசாலைகளுக்கு மட்டுமல்ல  சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டுள்ள வயாவிளான், வீமன்காமம், பன்னாலை, கீரிமலை, கொல்லங்கலட்டி, தெல்லிப்பழை,குட்டியப்புலம் பாடசாலைகளுக்கு இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, தந்திரமாக வன்னி இடமாற்றத்தில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். தமக்கு மிக வேண்டிய பெண் ஆசிரியர் ஒருவர் பதில் அதிபராக நியமிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார். இதற்கு அறிக்கை அரசியல் செய்யும் ஆசிரியர் சங்கம் ஒன்றும் உடந்தையாக உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

வன்னியில் துணுக்காய், வவுனியா வடக்கு, முல்லைத்தீவு, மடு வலயங்களுக்கு குறைந்தது 900 ஆசிரியர்களையாவது நியமிக்க  வேண்டிய நிலையில் இவ்வாறு ஒளித்து வைப்பது வன்னிப் பிள்ளைகளுக்குச் செய்யும் பச்சைத் துரோகம் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.