திருமணம் முடிந்து 6 ஆண்டுகளாக முதலிரவு நடக்கவில்லை! பரபரப்பான நீதிமன்றம்

திருமணம் முடிந்து 6 ஆண்டுகளாக முதலிரவு நடக்கவில்லை எனக்கூறி மனைவியிடம் இருந்து அரசு அதிகாரிக்கு விவாகரத்து வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

முதலிரவு நடக்கவில்லை

மைசூருவில் அரசு அதிகாரியாக பணியாற்றி வருபவர் சேத்தன். இவரது மனைவி அனிதா (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அனிதாவிற்கு தாய் மற்றும் சகோதரர் மட்டுமே உள்ளனர். அவருடைய தந்தை இறந்துவிட்டார். திருமண நிச்சயதார்த்தத்தின்போது சேத்தனின் வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவது என்றும், அனிதாவின் வீட்டில் முதலிரவு நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டு இருந்தது.

மேலும், சிவமொக்காவில் பணியாற்றி வரும் அனிதா திருமணத்திற்கு பின் பணி இடமாற்றம் பெற்று வருவதாக சேத்தனிடம் கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து சேத்தனுக்கும், அனிதாவுக்கும் திருமணம் நடந்தது. ஆனால், திருமணத்தின்போது பேசியபடி அனிதாவின் வீட்டில் முதலிரவுக்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. இதனால் சேத்தனுக்கும், அனிதாவுக்கும் முதலிரவு நடக்கவில்லை. அதன்பிறகும், வெவ்வேறு காரணங்களை சொல்லி அனிதா, சேத்தனுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே, அனிதா தான் கூறியபடி பணி இடமாற்றமும் பெறவில்லை.

விவாகரத்து

இதன் காரணமாக சேத்தன் மிகவும் மனம் உடைந்து போனார். இதனால், தனது இல்லற வாழ்க்கையை கூறியும், அனிதா தன்னை கொடுமை செய்வதாக கூறியும் மைசூரு குடும்பநல கோர்ட்டில் சேத்தன் விவாகரத்து கோரினார். இதற்கு போட்டியாக, தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக சேத்தன் மீது அனிதா குற்றம்சாட்டினார். சேத்தன் விவாகரத்து கேட்ட வழக்கில் அனிதாவுக்கு எதிராக அவரால் கோர்ட்டில் எந்த சாட்சியத்தையும் அளிக்க முடியவில்லை. இதனால், விவாகரத்து கோரிய மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், குடும்ப நல கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்தும் முதலிரவு நடக்காததை காரணம் காட்டியும் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தரக்கோரி சேத்தன் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி, அனிதாவிடம் இருந்து சேத்தனுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டார்.