யாழில் நிவாரணம் கொடுத்து 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விதாணையார் சிக்கியது எப்படி?

யாழ் மாவட்டத்தில் வீட்டுத் திட்டம் மற்றும் பாதிக்கப்பட்டதற்கான உதவி வழங்கல் குடும்பத் தலைவி ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற கிராம அலுவலரை உடனடியாக பதவியிலிருந்து நீக்கும்படி மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன் உத்தரவிட்டுள்ளார்.

சண்டிலிப்பாய் பிரதேசசெயலர் பிரிவின் கீழ் உள்ள கிராம அலுவலரே இலஞ்சம் பெற்று, பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

இழப்பீட்டு நிவாரணமாக ஒரு இலட்சம் ரூபா வழங்கப்படும், திட்டமொன்றில் பெண் தலைமைத்துவ குடும்பமொன்றை இணைப்பதென்றால், இழப்பீட்டு தொகையில் 25,000 ரூபாவை தனக்கு இலஞ்சமாக தர வேண்டுமென கிராம அலுவலர் தெரிவித்துள்ளார். குடும்ப தலைவியும் அதற்கு சம்மதித்தார். எனினும், 15,000 ரூபாவையே அந்த பெண் வழங்கினார்.

“பேச்சு பேச்சாக இருக்க வேண்டும்“ என கண்டிப்பாக கூறிய கிராமசேவகர், மீதி 10,000 கேட்டு நச்சரித்துள்ளார். வேறு வழியின்றி குடும்ப தலைவி அதையும் வழங்கினார்.

தனக்கு நேர்ந்த சம்பவத்தை இரகசிய கடிதமாக எழுதி, மாவட்ட செயலாளரிற்கு அனுப்பினர் அந்த பெண். தனது அலுவலர்களை அனுப்பி விடயம் தொடர்பில் விசாரணை நடத்தினார் மாவட்ட செயலாளர். பின்னர், குறிப்பிட்ட பெண்ணை மாவட்ட செயலகத்திற்கு அழைத்து விடயத்தை ஆராய்ந்தார்.

உரிய ஆதாரங்களை திரட்டி, நிர்வாக ஒழுக்காற்று நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன் இறுதி முடிவு கிட்டும் வரை, இலஞ்சம் வாங்கிய கிராம அலுவலரை தற்காலிகமாக பணநீக்குமாறு நேற்று எழுத்துமூலம் உத்தரவிட்டுள்ளார் மாவட்ட செயலாளர்.