ரணில் என்கிற கூழ் பானைக்குள் விழுந்து கிடக்கும் தமிழ் கூட்டமைப்பு பல்லிகள்!

நாடு இன்று ஒரு மிக பாரிய அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டு உள்ளது.ஜனநாயக சதி மூலமாக ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நீக்கப்பட்டு புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நியமிக்கப்பட்டு உள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் வீற்றிருக்கின்றார் மஹிந்த. அலரி மாளிகையில் தொடர்ந்தும் இருக்கின்றார் ரணில். உலகின் சில செய்தி நிறுவனங்கள் இலங்கையில் இரு பிரதமர்கள் என்பதாக செய்திகள் வெளியிட்ட வண்ணம் உள்ளன.

இரு தலைகளும் பிரதமர் பதவியின் உரிமத்தை குறி வைத்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஏட்டிக்கு போட்டியாக களத்தில் குதித்து உள்ளன. இதன் பின்னணியில் ஆதரவு கோரல்கள், கட்சி தாவல்கள் ஆகியன இடம்பெற்றவாறு உள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையை இரு தரப்புகளும் சந்தித்து பேசி ஆதரவு கோரி உள்ளன. ரணிலுக்குத்தான் அவர்களின் ஆதரவு என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் இத்தீர்மானம் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி எடுக்கப்பட்டு உள்ளதா? ரணிலின் நலனை முன்னிறுத்தி எடுக்கப்பட்டு உள்ளதா? அல்லது கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் நலனை மாத்திரம் முன்னிறுத்தி எடுக்கப்பட்டு உள்ளதா? என்பன எமக்கு முன்னால் உள்ள சந்தேகம் ஆகும்.

பெருந்தேசிய கட்சிகள் அரசியல் ரீதியாக மோதுகின்றபோது சிறுபான்மை மக்களின் கட்சிகள் நடுநிலை வகித்து சுயாதீனமாக செயற்படுவதே உசிதம் ஆனது.

அதுவே சிறுபான்மை சமூகங்களின் நலனுக்கு உகந்தது. ஆனால் சிறுபான்மை சமூகங்களுக்கு மிக பாரிய நன்மைகள் கிடைக்க பெறும் என்கிற தீர்க்கதரிசனம்,தூர நோக்கு ஆகியவற்றுடன் பெருந்தேசிய கட்சிகளில் ஒன்றை சிறுபான்மை மக்களின் கட்சிகள் ஆதரிக்க முடியும்.

இந்நிலையில்தான் தமிழ் மக்களுக்காக எந்த விதமான உத்தரவாதத்தை பெற்று கொண்டு ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானம் எடுத்து உள்ளது என்பதையும், மஹிந்த ராஜபக்ஸவிடம் இருந்து தமிழ் மக்களுக்காக எந்த விதமான உத்தரவாதத்தை பெற முடியாமல் போனது என்பதையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவிக்க வேண்டி உள்ளது.

அதை விடுத்து இதய பூர்வமான தீர்மானம் என்று சுமந்திரன் பாணியில் கூறுவது அப்பட்டமான மடத்தனம் ஆகும்.

சிங்கள மக்களின் பேராதரவு பெற்ற தலைவர் ஒருவராலேயே தமிழ் மக்களுக்கான தீர்வை நிச்சயம் பெற்று தர முடியும். தற்சமயம் சிங்கள மக்களின் அதீத செல்வாக்கு பெற்ற தலைவராக மஹிந்த ராஜபக்ஸவே உள்ளார். அவர் இன்றி அணுவும் அசையாது என்பதாக அரசியல் நிலைவரம் உள்ளது.

எனவே இவரை அரவணைக்கா விட்டாலும் பரவாயில்லை அனுசரித்தாவது தமிழ் மக்களுக்கான தீர்வை பெற தமிழ் தேசிய கூட்டமைப்பு எத்தனிக்க வேண்டிய பொறுப்பு வாய்ந்த தருணம் இதுவாகும்.

ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பிச்சைக்காரனின் புண்ணை போல நீடிக்க வேண்டும் என்கிற நோக்கம் காரணமாகவே ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் கூட்டமைப்பு ஆதரிக்கிறது என்கிற முடிவுக்கு வர நேர்கின்றது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்கிற விடயத்தில் காட்டாத உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ரணில் விக்கிரமசிங்கவை காப்பாற்ற வேண்டும் என்கிற விடயத்தில் இக்கூட்டமைப்பு முண்டி அடித்து காட்டுகின்றது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏதேனும் ஒரு சறுக்கல் நேர்கின்றபோது பாராளுமன்றத்தை கலைப்பதை காட்டிலும் பொதுஜன வாக்கெடுப்பு ஒன்றுக்கு செல்வார் என்றே விளங்குகின்றது. அரசியல் அமைப்பு ரீதியாக தீர்வு காண முடியாத பிரச்சினைகளுக்கு இவ்வாறான பொதுஜன வாக்கெடுப்பை நடத்த முடியும்.

பிரதமராக மஹிந்தவையா, ரணிலையா விரும்புகின்றனர்??என்கிற கேள்வியை மக்கள் முன் வைக்க முடியும். நிச்சயமாக இப்போட்டியிலும் மஹிந்தரின் வெற்றியே உறுதியாக தெரிகின்றது.

அற படித்த அதிக சட்டத்தரணிகளை கொண்ட தமிழ் கூட்டமைப்பு பல்லிகள் இவற்றை எல்லாம் சிந்திக்காமல் ரணில் என்கிற கூழ் பானைக்குள் விழுந்து விட்டன என்பதே முடிந்த முடிவாகும்.