கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் திடீர் அதிகரிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துக் குளங்களினதும் நீர்மட்டம் கடந்த இருபத்திநான்கு மணித்தியாலத்தில் பெய்த மழை காரணமாக திடீர் என அதிகரித்துள்ளது.

கிளிநொச்சியில் பாரிய நீர்ப்பாசனக் குளங்கள் நான்கும் இடை நிலை நீர்ப்பாசனக் குளங்கள் ஐந்தும் உள்ள நிலையில் திடீர் நீர்மட்டம் அதிகரிப்பினால் இடை நிலை நீர்ப்பாசனக் குளங்களான கனகாம்பிகை குளம் , வன்னேரிக்குளம் என்பன வான் பாய்கின்றது காலநிலை தொடர்ந்து இவாறு செல்லுமானால் கிளிநொச்சியில் உள்ள மீதி ஏழு குளங்களும் வான் பாயும் என எதிர்வு கூறப்படுகிறது.

கடந்த இருபத்து நான்கு மணிநேர மழையில் பின்னர் கிளிநொச்சிக் குளங்களின் வாசிப்பு இரணைமடுக்குளம் 25 அடி 6 அங்குலமாகவும், அக்கராயன் குளம் 19 அடி 4 அங்குலமாகவும், கல்மடுக் குளம் 23 அடி 4 அங்குலமாகவும், கரியாலை நாகபடுவான் குளம் 4 அடி 01 அங்குலமாகவும், முறிப்புக் குளம் 15அடி 5 அங்குலமாகவும் பிரமந்தனாறுக் குளம் 11 அடியாகவும், குடமுருட்டிக் குளம் 05அடி 01 அங்குலமாகவும், வன்னேரிக்குளம் 10 அடியாகவும், கனகாம்பிகைக் குளம் 11 அடி 01 அங்குலமாகவும் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கிளிநொச்சி, கனகாம்பிகை குளம் வான்பாய்ந்து வருகின்றமையால் கிளிநாச்சி ஆனந்தபுரம் கிழக்கும் மற்றும் இரத்தினபுரம் ஆகிய பகுதிகளில் மக்கள் குடியிருப்புகள் சிலவற்றினுள் வெள்ளம் உட்சென்றுள்ளது.

அதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

குறித்த பகுதியில் வாழும் வெள்ளத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தொடர்பில் கிளிநாச்சியில் உள்ள 7வது காலாற்படையினரால் 11 குடும்பங்களை சேர்ந்த 57 பேருக்கான உடனடி உணவுகள் வழங்கப்பட்டுள்ளன.

சிறுவர்கள், பெண்கள், வயது முதரிந்தவர்கள் தொடர்பில் அவர்களை மீட்பதற்காக விரைந்த படையினர், குறித்த குடும்பங்களிற்கான உடனடி உணவுகளை வழங்கினர்.

இதேவேளை, குறித்த பிரதேசங்களில் உள்ள குடும்பங்களை சேர்ந்த சுமார் 200பேருக்கான மதிய உணவு, குடிநீர் மற்றும் பிஸ்கட் வகைகளை கிளிநொச்சி நகரில் சுயேட்சை குழுவில் போட்டியிட்டு கரைச்சி பிரதேச சபை உறுப்பினராக தெரிவான தாமோதரம்பிள்ளை ரஜனிகாந்தால் வழங்கப்பட்டு வருகின்றன.

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக வெள்ளத்தால் தாம் பாதிக்கப்படுவதாகவும், முறையான வடிகாண் வசதி இன்மையால் இவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முறையான திட்டமொன்றை வகுத்து தருமாறும் மக்கள் கோருகின்றனர். மக்கள் உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றிற்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும்தெரிவித்துள்ளனர்.