வீட்டுக்கு வீடு இராணுவம்! தமிழ் அரசியல் தலைமைகளின் தோல்வியா? இராணுவத்தரப்பின் வெற்றியா?

இத்தகைய குரூர சிந்தனைகளைக் கொண்டுள்ள சரத்பொன்சேகாவுக்கு தானே, தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதரவு வழங்கி, 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் வாக்களித்து அவரை பெற்றிபெறச்செய்யுமாறு, தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இன்றைக்கு அந்தச்சூழலை மீள்நினைவுபடுத்தும்போது, சந்தர்ப்பவாதங்களுக்கு ஏற்ப மட்டும் முடிவுகளை எடுத்து, தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களை எப்படியெல்லாம் தவறாக வழிநடத்திச் சென்றிருக்கிறது? மக்களின் வாக்குரிமையை எப்படியெல்லாம் கபளீகரம் செய்திருக்கிறது? என்பதன் ஆபத்தை உணர முடிகின்றது அல்லவா? மைத்திரி - ரணில் கூட்டு அரசிலும்கூட சரத்பொன்சேகா, தனக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவியைத்தருமாறு ஒற்றைக்காலில் நின்றார், நிற்கின்றார். இப்போதும் அந்த அமைச்சு பதவி பற்றியே கனவு காண்கின்றார்.

ஆனால் சரத்பொன்சேகாவுக்கு கிடைத்தது என்னவோ, வனஜீவராசிகள் அமைச்சு பொறுப்புத்தான். காட்டாட்சி சிந்தனை கொண்டுள்ளவருக்கு இது மிகவும் பொருத்தமான அமைச்சு தான்.

நிலைமைகள் இவ்வாறிருக்க,இராணுவத்தினரின் மனிதநேய வேலைத்திட்டங்கள் தொடர்பில், வவுனியாவில் வசிக்கும் சிவில் சமூக மனித உரிமைகள் செயல்பாட்டாளர் ஒருவரிடம் கருத்துக்கேட்டேன்.

'அவர்கள் மக்களுக்கு என்ன தான் செய்தாலும், இறந்த காலத்தில் நடத்தப்பட்டுள்ள சம்பவங்களுக்கு பொறுப்புக்கூறும் பொறிமுறையில் தவறிழைத்து விடுவார்களாயின்,அது இதுநாள் வரைக்கும் அவர்கள் நடந்துவந்து கொண்டிருக்கும் நல்லிணக்கப் பாதையிலிருந்து நீண்ட தூரம் அவர்களை பின்னோக்கித்தள்ளிவிடும்.' என்று எச்சரித்தார்.

யாழ்.பாதுகாப்பு படைகளின் தலைமையகம் பலாலியில், கடந்த 20 செப்டம்பர் 2018 வியாழக்கிழமை அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில், 'யார் விமர்சித்தாலும் - தடுத்தாலும், தமிழ் மக்களுக்கான எமது நலவாழ்வுத்திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கும்.

எவரது விருப்பு வெறுப்புகளுக்காகவும் திட்டங்களை நிறுத்த முடியாது. இவை, எத்தகைய பிரதிஉபகாரங்களையும் எதிர்பாராமல், மக்களுக்கான சேவை என்பதை மட்டுமே முழுவதும்

நோக்கமாகக்கொண்டு, இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக மேம்பாட்டுக்கான உதவித்திட்டங்கள்.'என்று, யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அறிவித்திருக்கிறார்.

இந்த பத்தியின் தொடக்கத்தில் ஏலவே நான் குறிப்பிட்டுள்ளதைப்போல, தமிழ் மக்களும் அவரை ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப்போல நித்தமும் அணுகத்தொடங்கிவிட்டனர்.

இளகிய இரும்பைக் கண்டால், கொல்லன் எதையோ தூக்கித்தூக்கி அடிப்பானாம்.அதைப்போலவே இராணுவத்தினரும் முன்னரைப்போல அதிக 'ரிஸ்க்' ஏதும் இல்லாமல், 'உதவித்திட்டங்களின் பெயரால்' தமிழ் மக்களின் மனங்களில் சாவகசமாகப் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல்பிரிவைப் போன்று இனிவரும் காலங்களில் இலங்கை இராணுவத்தினரும், பலாலி கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு வெளியே, கிராம அலுவலர் பிரிவுகளை 'கோட்டங்களாக'ஒருங்கிணைத்து, ஆங்காங்கே 'மக்கள் நலன் காப்பகம்' என்ற பெயரிலோ, 'மக்கள் தொடர்பகம்' என்ற பெயரிலோ, சிவில் அலுவலகங்களை திறந்தாலும் கூட இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

'சிங்களப்படை வெறியன் சிரிச்சா, நீ சிரிக்காத. அவன் சிரிச்சுப் பேச வீட்டுக்கு வந்தா, பாய் விரிக்காத' என்று, இனஓர்மம் கற்பிக்கும் ஈழத்தின் உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தனின் பாடல்களுக்கான தேவைகள் அற்றுப்போய், 'வீட்டுக்கு வீடு வாசல்படி போல, வீட்டுக்கு வீடு இராணுவம் வேண்டும்.

' என்று, தமிழ் மக்களே வலிந்து திணித்து கேட்பது போல, ஒரு ஈர்ப்புச்சூழல் உருவாகி வருகிறது. 'பல்லுக்குத்தவும்,தலைவலிக்கு தைலம் தேய்க்கவும் கூட இராணுவத்தினரை கூப்பிடும் அளவுக்கு' மக்களின் மனம் நெகிழ்ச்சி அடைந்திருக்கிறது.

இந்தப்போக்கு நல்லதா - கெட்டதா? சரியா - தவறா? என்பதற்கு அப்பால், இது இராணுவத்தரப்பினரின் வெற்றியா? இல்லை, தமிழ் அரசியல் தலைமைகளின் தோல்வியா?

இவ்வருடம் செப்டம்பர் மாதம் யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தமிழமுதம் விழா முற்றத்தில் நின்று, தமிழகத்தைச் சேர்ந்த ஈழ உணர்வாளரும் பிரபல ஓவியருமான புகழேந்தி அவர்கள் கூறியது போலவே, 'அறிவற்ற உணர்வும் - உணர்வற்ற அறிவும், ஈழத்தமிழர்களுக்கு இனி ஒருபோதும் தேவையே இல்லை தான்.' என்பது எத்தனை பொருத்தம்!.

செஞ்சுடர்.சே