ஆவா குழு துண்டு பிரசுரங்களை விநியோகித்ததாக கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிணையில் விடுதலை

வவுனியாவில் ஆவா குழு துண்டு பிரசுரங்களை விநியோகித்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்ட ஊடகவியலாளரை பிணையில் செல்ல வவுனியா நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

வவுனியாவில் ஆவா குழு தொடர்பான துண்டு பிரசுரம் விநியோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த 2 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்ட வவுனியா ஊடகவியலாளர் இ.தர்சன் என்பவரை பிணையில் செல்ல வவுனியா மாவட்ட நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

சிரேஸ்ட ஊடகவியலாளராகிய இம்மானுவேல் தர்ஷன் என்பவரே பொலிஸாரினால் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில் குறித்த ஊடகவியலாளரை விடுதலை செய்த நீதிமன்றம் வழக்கை ஜனவரி மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

விடுதலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சக ஊடகவியலாளர்களுடன் சென்று வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டில் வவுனியா பொலிஸார் தகுந்த ஆதாரங்கள் இன்றி கைது செய்து முறையற்ற விதத்தில் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்ததாகவும், கைவிலங்கிடப்பட்ட நிலையில் ஏ9 வீதியில் வவுனியா பொலிஸ் நிலையத்திலிருந்து நீதிமன்றம் வரை வீதியில் அழைத்து சென்றதாகவும், செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.

இது போன்ற செயற்பாட்டால் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளேன் என தெரிவித்தும் ஊடகவியலாளராகிய என் மீது பொலிஸாரினால்

அடக்குமுறை பிரயோகிக்கப்பட்ட நிலையில் எனக்கு நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.