மக்களே அவதானம்!!! ஒரு மில்லியன் யூரோ பணம் என்று ஏமாற்றப்படும் அரசியல்வாதிகள்!!

ஒரு மில்லியன் யூரோ நாணயத்தாள் என கூறி அவற்றை ரூபாவுக்கு மாற்றித்தருமாறும் அதற்காக பெருமளவு தரகுப் பணம் தருவதாகவும் கூறி பணம் படைத்தவர்கள் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்களை ஏமாற்றும் சம்பவங்கள் தொடர்பான அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அச்சு அசலாக யூரோ நாணயத்தாள் போல் காணப்படும் குறித்த நாணயத்தாளில் ஒரு மில்லியன் யூரோ என அச்சிடப்பட்டுள்ளது. அவ்வாறான நாணயத்தாள்களுடன் படித்த தமிழ் அரசியல் முக்கியஸ்தர்கள் மற்றும் தமிழ் வர்த்தகர்களை சந்திக்கும் ஒரு குழுவினர் , தமது பொறுப்பில் வெளிநாடுகளில் வைப்பிலிருந்த  விடுதலைப்புலிகளின் பணத்தை ஒரு நாணயத்தாளாக வங்கியில் பெற்று வந்துள்ளதாகவும் அவற்றை இலங்கை ரூபாவில் மாற்றித் தருமாறும் பலரைக் கேட்டுள்ளனர். அவ்வாறு மாற்றித் தந்தால் அதற்காக 50 லட்சம் ரூபாவுக்கு மேல் தரகுப் பணம் தருவதாகவும் கூறியுள்ளனர்.

இலங்கை பெறுமதியில் கிட்டத்தட்ட 20 கோடி ரூபா பெறுமதியான குறித்த நாணயத்தாளைப் பார்த்து மயங்கி அதை பெற்றுக் கொண்டு தரகுப் பணத்தைப் பெறுவதற்கு மோகம் கொண்ட படித்த தமிழ் அரசியல் பிரமுகர் ( இவர் ஒருவரே தற்போது வடபகுதியில் உள்ள அரசியல்வாதிகளில் பல்கலைக்கழகத்துக்கு சென்று பட்டம் பெற்றவர்) ஒருவர், தனக்கு நெருக்கமான முக்கிய பிரமுகர் ஒருவரிடம் அந்த நாணயத்தாளை புகைப்படம் எடுத்து அனுப்பி அதன் நம்பகத்தன்மை தொடர்பாக கேட்டுள்ளார். பனங்காட்டு நரியான குறித்த பிரமுகர் அந்த நாணயத்தாள் தொடர்பாக இணையத்தளத்தில் ஆராய்ந்த போது குறித்த நாணயத்தாள்களை 3 டொலருக்கு அச்சிட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என்பதை அறிந்து அந்த விடயத்தை அரசியல்வாதியிடம் கூறியுள்ளார்.

குறித்த அரசியல்வாதி இதனால் அதிர்ச்சியுற்று இவ்வாறான பணத்தாள்கள் தொடர்பாக பலரும் பணப்பரிமாற்றம் செய்துள்ளதாகவும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான மில்லியன் பணத்தாள்கள் யாராவது ஒருவரின் பிறந்ததினம் மற்றும் வேறு கொண்டாட்டங்களின் போது கௌரவத்துக்காக பகிருவதற்கு சில நிறுவனங்களால் அச்சடிச்சு வெளியிடப்படுகின்றது எனவும் அவ்வாறான நாணயத்தாள்கள் 3 டொலர்களுக்கு கிடைக்கும் எனவும் அந்த பிரமுகர் தெரிவித்துள்ளார். உதாரணமாக ஒருவரது திருமணச்சடங்கின் போது இவ்வாறான பணத்தாள்களை திருமண நிகழ்வுகளுக்கு வருபவர்களுக்கு வழங்கி அவர்களை மகிழ்ச்சிப்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தான, தருமம் செய்யாமல் சாப்பிடாமல் கொள்ளாமல்  பல வழிகளிலும் மக்களிடமிருந்து பெருந்தொகை பணத்தை வர்த்தகம் என்ற போர்வையில் கொள்ளையடித்து வைத்திருக்கும் யாழ்ப்பாண வர்த்தகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இது தொடர்பாக அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். குறித்த நாணயத்தாளும் அதை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் நாம் இங்கு காட்டியுள்ளோம்..