வடமாகாணத்தில் இடமாற்ற முறைகேடுகள்: இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

வடமாகாணத்தில் இடமாற்றங்களின் போது ஒரு சிலருக்கு மட்டும் சலுகைகளை வழங்கும் பாரபட்சங்களையும், அரசியல் தலையீடுகளையும் இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக எதிர்க்கிறது. முறைகேடுகள் நிவர்த்திசெய்யப்பட்டு உரிய காலத்தில் இடமாற்றச்சபைகள் கூட்டப்படவேண்டும் எனத் தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் எமது இந்தக் கோரிக்கையைப் புறக்கணித்து இடமாற்றங்கள் தொடர்பான நீதியாகச் செயற்படுவதற்கு வடமாகாணக் கல்வியமைச்சும், வடமாகாண கல்வித் திணைக்களமும் தொடர்ந்தும் பின்நிற்குமானால் மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று(09) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது.

கடந்தகால இடமாற்ற முறைகேடுகள் களையப்படும்வரை இடமாற்றச் சபைகளில் கலந்துகொண்டு புதிய இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த ஆதரவு வழங்குவதில்லைஇலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.

அனைவருக்கும் சமத்துவமான நீதி பின்பற்றப்படவேண்டும். இதனையும் மீறி வலய மற்றும் வடமாகாண கல்வித் திணைக்களம் இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துமானால் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

வடமாகாணத்தில் கடந்த காலங்களில் இடமாற்றங்களில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் பாரபட்சங்கள் தொடர்பான பல முறைப்பாடுகள் இலங்கை ஆசிரியர் சங்கத்தால் ஆதாரங்களுடன் பல தரப்பினரிடமும் முன்வைக்கப்பட்டிருந்தன.

ஆயினும் அரசியல்வாதிகளினதும், அதிகாரிகளினதும் பக்கச்சார்பான செயற்பாடுகளினால் நியாயத்தன்மை பின்பற்றப்படவில்லை. சட்டபூர்வமான இடமாற்றச்சபைகள் ஊடாகத் தீர்மானிக்கப்பட்ட இடமாற்றங்களில் பாரபட்சங்கள் காட்டப்பட்டன.

கடந்த வருடம் இடம்பெற்ற வருடாந்த இடமாற்றங்களிலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இடமாற்றத்துக்குத் தகுதி பெற்றிருந்த அழகியல் பாட ஆசிரியர்கள் சிலருக்கு இன்னமும் வடமாகாண கல்விப் பணிப்பாளரால் இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாறாக இடமாற்றச் சபையில் பரிசீலிக்கப்படாமல் இடமாற்றங்களில் பாரபட்சங்கள் காட்டப்பட்டுள்ளன.

இவை தொடர்பாக வடமாகாணக் கல்வியமைச்சர், வடமாகாண ஆளுநர், வடமாகாண முதலமைச்சர் ஆகியோருக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தும் இம் முறைகேடுகள் இன்றுவரை தீர்க்கப்படவில்லை.

இடமாற்றச் சபைகள் கூடுகின்றபோது இடமாற்றச்சபையின் தீர்மானங்களுக்குரிய அறிக்கைகள் பேணப்படுகின்றன. இந்த நிலையில் வடமாகாணக் கல்விப்பணிப்பாளர் இடமாற்றச் சபை தீர்மானத்தின் அடிப்படையிலேயே இடமாற்றங்களை நடைமுறைப்படுத்தியதாக கூறிவருவது ஏற்றுக்கொள்ளமுடியாதது.

இவைதொடர்பாக வடமாகாண முதலமைச்சருக்கு ஆதாரங்களுடன் தெரியப்படுத்தியிருந்த நிலையிலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமை கவலைக்குரிய விடயமாகும்.

யாழ்.வலயத்தில் இடமாற்றச்சபைத் தீர்மானத்துக்கமைய நடைமுறைப்படுத்தியிருந்த சில இடமாற்றங்களிலும் இடமாற்றச்சபையின் தீர்மானத்தை மீறி வடமாகாணக் கல்வியமைச்சால் தன்னிச்சையான முறையில் இடமாற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன.

கடந்த கால முறைகேடுகளை நிவர்த்தி செய்வதற்கு வடமாகாண கல்வியமைச்சுக்கு ஒரு நாள் போதுமானதாகும். முறைகேடுகளை நீக்க கல்வியமைச்சும் வடமாகாண கல்வித்திணைக்களமும் உடனடியாக முன்வரவேண்டும்.

எமது இத்தகைய நிலைப்பாட்டை வெளிமாவட்ட ஆசிரியர்களின் இடமாற்றங்களுக்கு காரணம் காட்டி வடமாகாணக் கல்வித்திணைக்களம் வருடாந்த இடமாற்றத்தை இழுத்தடிக்கவும் நாம் அனுமதிக்கமாட்டோம்.

முறைகேடுகள் நிவர்த்திசெய்யப்பட்டு உரிய காலத்தில் இடமாற்றச்சபைகள் கூட்டப்படவேண்டும். உரிய காலத்தில் இடமாற்றச்சபை கூட்டப்படாத பட்சத்தில் வெளிமாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களையும் ஒன்றிணைத்துப் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்படுவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.