மகன் திருடனல்ல! முதலமைச்சரை இழுக்கிறார் தவராசா

வடமாகாண எதிர்கட்சி தலைவரின் மகன் சுப்பர்மாக்கெற் ஒன்றில் திருட்டில் ஈடுபட்டதாக வெளியான இணையச் செய்தியினை முதலமைச்சர் மின்னஞ்சல் வழி பகிர்ந்துகொண்டமைக்கு சி.தவராசா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

அரசியல் ஆதாயத்திற்காக தனிப்பட்ட விடயத்தை பேசுவதாக இருந்தால் அவற்றை பொதுவெளியில் பகிரங்கமாக விவாதிக்க நான் தயாராகவே உள்ளேன். நீங்கள் அதற்கு தயாரா? என வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா சவால் விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவருக்கு முதலமைச்சர் அனுப்பிய மின்னஞ்சலிற்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவர் அனுப்பிய மின்னஞ்சலிலேயே சவால் விடுத்துள்ளார்.

”யாழ். வர்த்தக நிலையத்தில் திருட்டு! வடக்கு மாகாண சபை முக்கிய பிரமுகரின் மகனும் சிக்கினார்” என்ற தலைப்பில் இணையத்தளத்தில் வெளியான செய்தியை எனக்கும் வடக்குமாகாண அமைச்சர்கள்,அவைத்தலைவருக்கும் அனுப்பிவைக்கப்பட்ட மின்னஞ்சலிற்கு எனது நன்றிகள்.

மேற்படி விடயத்தில் தங்களது ஊதுகுழல் இணையத்தளத்தில் ஒரு செய்தியை வர வைத்து அதனை பரப்பி அரசியல் லாபம் தேடும் தங்கள் நோக்கத்தையிட்டு நான் பரிதாபப்படுகின்றேன்.

எனது மகனிற்கு 26 வயது. அவர் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுபவரோ அல்லது மகாண சபையில் நான் அங்கம் வகித்ததன் மூலம் ஏதாவது நன்மையை பெற்றவரோ அல்ல.அவரது நடவடிக்கைகளிற்கும்எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. அவர் தனித்துவமானவர் எனக்கூறி நான் தப்ப எண்ணுவதாகவும் கருதவேண்டாம்.

மேலே தரப்பட்ட தங்கள் ஊதுகுழல் இணையத்தில் வெளியான விடயத்திற்கு வருகின்றேன். அதில் நீங்கள் தப்புக்கணக்கு போட்டுள்ளீர்கள். அதில் கூறப்பட்டுள்ள விடயங்களை பிழையென என்னால் நிரூபிக்கமுடியும்.

ஆனாலும் தனிப்பட்டமுறையில் நிரூபிக்காமல் பகிரங்கமாகவே நிரூபிக்க தயாராக உள்ளேனெனவும் சி.தவராசாவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலுள்ள சுப்பர்மார்க்கெட் ஒன்றில் தலைக்கவசம் சகிதம் திருட்டில் ஈடுபட்ட கும்பலில் சி.தவராசாவின் மகனும் இருந்திருந்ததாக இணையமொன்று செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தனது மகனின் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பில் காவல்துறை உயர்மட்டங்களுடன் சி.தவராசா முட்டிமோதியிருந்தது குறிப்பிடத்தக்கது.