யாழில் இளைஞர்களின் சுற்றிவளைப்பால் தடுமாறிய ஐயர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளான குமரப்பா- புலேந்திரன் நினைவுத் தூபி அமைப்பதில் வல்வெட்டித்துறையில் நேற்றைய தினம் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

நினைவுத் தூபிக்கான அடிக்கல் நாட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டு பூஜை வழிபாடுகள் முதற்கொண்டு அனைத்தும் அங்கு வந்திருந்த இளைஞர்களால் தடுக்கப்பட்டுள்ளன. 

வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் குமரப்பா புலேந்திரனின் நினைவுத் தூபி அமைக்கப்பட்டிருந்த இடத்தில் புதிய தூபியை அமைப்பதற்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தார். 

இதற்கமைய இன்று காலை 9 மணிக்கு அடிக்கல் நாட்டுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

 இதற்கமைய ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் இதனை எதிர்த்து வல்வெட்டித்துறை நகர சபையின் சுயேட்சைக் குழுவினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அடிக்கல் நாட்டும் இடத்திற்கு வந்த சுயேட்சைக் குழு உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் குமரப்பா புலேந்திரனின் தியாகத்தில் அரசியல் செய்யக்கூடாது. இதனை நிறுத்த வேண்டுமென்று கோரினர். 

இதன் போது இரு தரப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டது. அதனால் அப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. 

அதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அடிக்கல் நாட்டவதற்கு வெட்டப்பட்ட குழியை மண்போட்டு மூடியுள்ளனர். 

 அத்தோடு அங்கிருந்தவர்களையும் விரட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதனையடுத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளான குமரப்பா புலேந்நிரனின் நினைவுத் தூபியை அமைப்பதற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதன் போது புலிகளுக்கு தூபி அமைக்கப்படுவதாக நீதிமன்றின் கவனத்திற்கு இந்த விடயத்தை பொலிஸாரும் கொண்டு சென்றனர். இதற்கமைய இந் நிகழ்வை நிறுத்தி இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களை நீதிமன்றத்திற்கு வருமாறு அழைப்புக் கட்டளை விடுக்கப்பட்ட இருந்தது. 

 நீதிமன்றத்தில் பெறப்பட்ட அறிவித்தலை வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஆகியோரிடம் கொடுப்பதற்கு பொலிஸாரும் முயன்றுள்ளனர். ஆனபோதிலும் அவர்கள் அதனைப் பெறவில்லை. இதனையடுத்து நீதிமன்ற அறிவித்தலை அந்த இடத்தில் பொலிஸாரே வாசித்துக் காட்டினர். அதன் போது சிவாஜிலிங்கம் மற்றும் தவிசாளர் ஆகியோர் காதைப் பொத்திக் கொண்டு நின்றனர். 

மேலும், குறித்த இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அனைவரும் குமரப்பா புலேந்திரனின் நினைவு தூபி அமைப்பதில் அரசியல் வேண்டாம் என்பதை உறுதிப்பட தெரிவித்ததோடு, பெரும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த விடயத்தினை அரசியலாக்க முயற்சிப்பவர்கள் மீது பொதுமக்களும் தமது அதிருப்தியினை வெளியிட்டிருந்தனர்.

அத்துடன், மதத் தலைவர்கள் என்போர் சமூகத்தில் மதிக்கப்பட வேண்டியவர்களும், மரியாதைக்குரியவர்களுமாவர், எனினும் இன்றைய தினம் ஏற்பட்ட இந்த குழப்ப நிலை காரணமாக அங்கிருந்த இளைஞர்கள் பூஜைக்காக வருகைத்தந்திருந்த ஐயரை மிரட்டும் தொணியில் அங்கிருந்து அகற்றியுள்ளனர். இந்த விடயம் அங்கிருந்த அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.