பாடசாலை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஓர் அவசர எச்சரிக்கை

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து புதிய வகை போதை பானமொன்று தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் பிரதான அமைச்சர் ஒருவரின் உதவியுடன் நிறுவனமொன்று பாடசாலை பிள்ளைகளை இலக்கு வைத்து இந்த போதை தரும் பானத்தை தயாரித்துள்து.

இந்த பானத்தில் 4 வீத அல்கஹோல் செறிவு காணப்படுவதாகவும், பானம் தயாரிப்பதற்கு கடந்த அரசாங்கம் அனுமதி வழங்காத போதிலும் பிரதான அமைச்சர் ஒருவரின் அழுத்தம் காரணமாக இந்த பானத்திற்கு அனுமதி வழங்குவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது

நீலம், ஆரஞ்சு, மஞ்சள், சிகப்பு ஆகிய நிறங்களில் இந்த பானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அனுமதியை பெற்றுக் கொண்டு பானங்களை சந்தையில் விற்பனை செய்வதற்கு குறித்த நிறுவனம் முயற்சித்து வருவதாக மதுவரித் திணைக்கள உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது சந்தையில் 4.5 வீத அல்கஹோல் செறிவுடைய பியர் வகைகள் காணப்படுகின்றன.

புதிதாக உற்பத்தி செய்யப்பட்டுள்ள இந்த பான போத்தல்கள் சிலவற்றை குடித்தால் போதை ஏறும் என தெரிவிக்கப்படுகிறது.

பான உற்பத்திசாலை ஹொரணை மொரகஹாஹேனவில் அமைந்துள்ள உற்பத்திசாலையொன்றில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், 100 மில்லி லீற்றர் கொள் அளவுடைய போத்தல்களில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த பான போத்தல்களுக்கு தரச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளும் நோக்கில் மதுவரித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த பானத்தினால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகளை அறிந்த மதுவரித் திணைக்கள அதிகாரிகள், பானத்திற்கு அனுமதி வழங்க தயக்கம் காட்டி வருகின்றனர் என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

எனவே பெற்றோர்களே பாடசாலை மாணவ மாணவிகளே இவ் விடயத்தில் எச்சரிக்கையாக இருக்குமாறு சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.