போருக்கு பிந்திய யாழ்ப்பாணத்தில் புரையோடி போயுள்ள வன்செயல்களை ஒழிக்க இராணுவ பங்களிப்பு அவசியம்

  - சட்டத்துக்கு சமூக நீதிக்குமான அறவழி போராட்ட குழு

போருக்கு பிந்திய யாழ்ப்பாணத்தில் புரையோடி காணப்படும் வன்செயல்களை முழுமையாக இல்லாது ஒழிப்பதற்கு இராணுவத்தின் பங்கும், பங்களிப்பும் அத்தியாவசியம் ஆகும் என்று சட்டத்துக்கும் சமூக நீதிக்குமான அறவழி போராட்ட குழு நேற்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

அறவழி போராட்ட குழுவின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளவை வருமாறு:-

போருக்கு பிந்திய யாழ்ப்பாணத்தில் வன்செயல்கள் வகை, தொகை இன்றி இடம்பெற்ற வண்ணம் உள்ளன. ஆவா குழுவை சேர்ந்த இளைஞர்களின் குற்ற செயல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே செல்கின்றன. வாள்வெட்டு வன்முறைகள், போதை பொருள் விற்பனைகள், கட்டை பஞ்சாயத்துகள் போன்றவற்றுடன் குழு மோதல்களும் ஆவா குழுவினரால் அடிக்கடி நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் காரணமாக யாழ்ப்பாண மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போய் உள்ளது. எந்த நேரம் என்ன நடக்குமோ என்கிற அச்சத்தில் மக்கள் உறைந்து போய் கிடக்கின்றனர்.

ஆவா குழுவினரின் அட்டகாசங்களை பொலிஸாரால் அடக்க முடியாது உள்ளது என்பதற்கும் அப்பால் பொலிஸாருக்கும் ஆவா குழுவினருக்கும் இடையில் இரகசியமான நல்லுறவு நின்று நிலவுகின்றது என்றும் இதனால்தான் ஆவா குழுவினர் துணிந்து இயங்குகின்றனர் என்றும் சுட்டி காட்டப்படுகின்றது. கைது செய்யப்படுகின்ற ஆவா குழுவை சேர்ந்த இளைஞர்கள் மீது சிறிய குற்றச்சாட்டுகளே பொலிஸாரால் தாக்கல் செய்யப்படுவதுடன் இவர்களுக்கு பிணை வழங்கப்படுவதை பொலிஸார் ஆட்சேபிப்பதே இல்லை. இதனால் மீண்டும் வெளியில் வருகின்றபோது ஆவா குழு உறுப்பினர்கள் இன்னமும் பயங்கரமாக செயற்படுகின்றனர்.

ஜனநாயகம், மனித உரிமைகள் ஆகியன  மறுக்கப்படுவதுடன் பாதிக்கப்படுகின்ற தரப்பினர்களுக்கு நீதி கிடைப்பதும் இல்லை. இதனால் பொலிஸ் நடவடிக்கை, சட்ட ஒழுங்கு ஆகியவற்றின் மீது மக்கள் முற்றாக நம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர். மொத்தத்தில் யாழ்ப்பாணத்தில் காட்டு தர்பார் ஒன்று நடக்கின்றது. மூன்று தசாப்த கால யுத்தத்துக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்தப்பட்ட அமைதி, சமாதானம் ஆகியன அர்த்தம் அற்று போய் விட்டன. 

மேலும் ஆவா குழுவினரின் செயற்பாடுகள் யாழ்ப்பாண மாவட்டத்தையும் தாண்டி வட மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களையும் ஆக்கிரமித்து உள்ளன. இலேசாக அழிக்க முடியாத அளவுக்கு ஆவா குழுவினர் வளர்ந்து செல்கின்றனர். கஞ்சா போன்ற போதை பொருட்களின் விற்பனை,கட்டை பஞ்சாயத்து ஆகியவற்றின் மூலமே ஆவா குழுவினருக்கு வருமானம் கொட்டி கிடக்கின்றது. இவர்களும் போதை பொருளுக்கு அடிமைப்பட்டவர்களாக உள்ளனர்.  இவர்களை புலம்பெயர் நாடுகளில் உள்ள பிரிவினை செயற்பாட்டாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அவதானிக்கப்பட்டு உள்ளது. இது நாட்டின் தேசிய பாதுகாப்புக்குகூட எதிர்காலத்தில் பாரிய அச்சுறுத்தலாக மாறி விடும். 

ஆனால் இவர்களின் வன்செயல்களை கட்டுப்படுத்த இராணுவ தரப்பு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்வதாக தெரியவில்லை. ஏனென்றால் பொலிஸார் உதவி, ஒத்தாசை கோருகின்ற சந்தர்ப்பங்களை இவற்றில் இராணுவம் சாதாரண நிலைமைகளில் தலையீடு செய்ய முடியாது. ஆனால் இவ்வன்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக விசேட ஏற்பாடுகளை பாதுகாப்பு அமைச்சு தலைமையகம் இராணுவத்துக்கு வழங்க முடியும். இது குறித்து அரசாங்க உயர் மட்டத்திலும், தேசிய பாதுகாப்பு பேரவையிலும் விரிவாக ஆராயப்பட்டு வருகின்றது. எமது கருத்துப்படி இவ்வன்செயல்களை முழுமையாக இல்லாது ஒழிக்க இராணுவத்தின் பங்கும், பங்களிப்பும் அத்தியாவசியம் ஆகும். இது தொடர்பாக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும், கட்டம் கட்டமாகவாயினும் இராணுவத்துக்கு விசேட ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். இதற்கு நல்லாட்சி அரசாங்கம் உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.