கடும் வெப்பத்தால் திணறும் கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரங்கள்

நாட்டின் பிரதான நகரங்கள் சிலவற்றில் 35 பாகை செல்சியஸ்சை தாண்டிய வெப்பமான காலநிலை நிலவுவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனுராதபுரத்தில் 35 பாகை செல்சியஸ் வெப்ப நிலையை எட்டியுள்ளது. திருகோணமலையில் 35 பாகை செல்சியஸ் வெப்பநிலையை நெருங்கியுள்ளது.

கண்டி, இரத்தினபுரி, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய நகரங்களின் வெப்பநிலை 30 பாகை செல்சியஸை கடந்துள்ளது.

தலைநகர் கொழும்பில் 31 பாகை செல்சியஸ்சிற்கும் அதிகமான வெப்பநிலை நிலவுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, மழையற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது.

அதிக வெப்பம் காரணமாக நீர் வறட்சி ஏற்பட்டுள்ளதாகவும், சில பகுதிகளில் குடிநீர் பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் குறைந்த அளவில் சிக்கனமாக நீரை பயன்படுத்துமாறு, பொது மக்களிடம் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை அதிகளவான உஷ்ணம் காரணமாக பல்வேறு விதமான நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் துறைசார் வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.