சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஐவர் பணி நீக்கம்

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஐவர், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என, வவுனியா மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திருமதி ச. பத்மரஞ்சன் தெரிவித்தார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஐவர், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என, வவுனியா மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திருமதி ச. பத்மரஞ்சன் தெரிவித்தார்.

பயனாளிகளின் பெயர் விவரங்களின் மூலம், புளியங்குளம் சமுர்த்தி வங்கியில் கடன்களுக்காக விண்ணப்பித்து, கடன் தொகையைப் பெற்று நிதி மோசடி செய்தனர் என, வவுனியா மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சிலர் மீது கடந்த காலங்களில் குற்றஞ்சாட்டபட்டிருந்தது.

இதற்கமைய, மாவட்ட சமுர்த்தித் திணைக்களம், இது தொடர்பாகக் குழு அமைத்து, கொழும்பில் உள்ள சமுர்த்தித் திணைக்களத்தின் தலைமைப் பணிமனையின் மூலம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

விசாரணைகளின் முடிவில், வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் 5 பேருக்கு எதிரான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டது.

அதனடிப்படையில், குறித்த ஐவரையும் பதவியில் இருந்து நீக்குமாறு, சமுர்த்தி தலைமை அலுவலகத்தில் இருந்து, வவுனியா மாவட்ட செயலகத்துக்கு, நேற்று  (10) கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களுக்கான பணி நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக, வவுனியா மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.