முல்லைத்தீவில் வேலையற்ற பட்டதாரிகளின் கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பட்டதாரிகள் வெளியேறிய கால அடிப்படையில் நியமனத்தை வழங்குமாறு கோரி மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

முல்லைத்தீவில் வழங்கப்படவிருக்கும் நியமனத்தை காலம் தாழ்த்தாது, எவ்வித அரசியல் தலையீடும் இல்லாது, புள்ளி அடிப்படையில் நேர்முகத்தேர்வினை மேற்கொள்ளாமலும், பட்டதாரிகள் வெளியேறிய காலத்தின் அடிப்படையில் நியமனங்களை வழங்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் போரினால் பாதிப்புக்குள்ளாகிய பட்டதாரிகள் தமது பட்டப்படிப்பினை அதே ஆண்டில் பூர்த்தி செய்யாமல் காலதாமதமாக பூர்த்திசெயது இருப்பதால் நீதி நியாய அடிப்படையில் எம்மாவட்டத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு எம் பட்டதாரிகள் வெளியேறிய கால அடிப்படையில் நியமனத்தை வழங்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.