கஞ்சாவை விற்க வைத்திருந்தவருக்கு ரூபா 42,000 தண்டம் - யாழ்.மேல் நீதிமன்றம் தீர்ப்பு

குற்றவாளி இனிவரும் காலங்களில் குற்றச்செயல்களில் ஈடுபடக் கூடாது என்று மன்றினால் எச்சரிக்கப்பட்டு சிறைத்தண்டனையின்றி விடுவிக்கப்படுகிறார் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற எல்லையில் 2 கிலோ 875 கிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் 2 கிலோ 875 கிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்தார் மற்றும் அதனை விற்பனை செய்ய முயற்சித்தார் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவருக்கு எதிராக சட்ட மா அதிபரால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

குற்றப்பத்திரிகை எதிரிக்கு வாசித்துக் காண்பிக்கப்பட்டது. எதிரி குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார்.

“எதிரி குற்றச்சாட்டுக்களை தாமாக முன்வந்து ஏற்றுக்கொண்டுள்ளார். 5 கிலோ கிராமுக்கு உள்பட்ட கஞ்சாவை உடமையில் வைத்திருக்கும் குற்றவாளிக்கு சிறைத் தண்டனையின்றி நீதிமன்றில் தற்துணிவில் 25 ஆயிரம் ரூபாவுக்கு உள்பட்ட தண்டப் பணத்தை விதித்து தண்டனை வழங்க சட்ட ஏற்பாடு உண்டு.

அதற்கமைய எதிரியின் குடும்பநிலை மற்றும் அவர் இந்தக் குற்றம் தவிர்ந்த எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை என்பதை கவனத்தில் எடுத்து இந்த மன்று அவருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என்று எதிரி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மோகனதாஸ் மன்றுரை செய்தார்.

“எதிரி குற்றச்சாட்டுக்கள் இரண்டையும் ஏற்றுள்ளார். அவருக்கு இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தனித்தனியாக 25 ஆயிரம் ரூபாவை விஞ்சாத தண்டப் பணம் அறிவிடப்பட்டோ அல்லது ஒரு வருடத்தை விஞ்சாத சிறைத் தண்டையை வழங்கியோ இந்த மன்று தீர்ப்பளிக்கவேண்டும்” என்று வழக்குத் தொடுனர் சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் மன்றுரை செய்தார்.

“இரண்டு தரப்பு விண்ணப்பங்களும் மன்றினால் சாதகமாகப் பரிசீலிக்கப்படுகின்றன. நீதிவான் நீதிமன்ற ஆவணங்களும் மன்றினால் பரிசீலிக்கப்படுகின்றன.

எதிரி தாமாக முன்வந்து குற்றத்தை ஏற்றுக்கொண்டதால் அவரை மன்று குற்றவாளியாக இனங்காண்கின்றது.

2 கிலோ 875 கிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குற்றத்துக்கு 21 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதிக்கப்படுகிறது. அதனை செலுத்தத் தவறின் 7 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

இரண்டாவது குற்றச்சாட்டான கஞ்சாவை விற்பனை செய்ய முயற்சித்தமைக்கு குற்றவாளிக்கு 20 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதிக்கப்படுகிறது. அதனை செலுத்தத் தவறின் எதிரி 7 மாதங்கள் சாதாரண சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

இனிவருங்காலங்களில் எதிரி எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடக்கூடாது என எச்சரித்து சிறைத் தண்டனையின் அவர் விடுவிக்கப்படுகிறார்” என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்தார்.