ஆமி தளபதியின் உதவியுடன் கண் புரையால் பார்வையிழந்தவர்களுக்கு வெளிச்சம் கொடுத்த செல்வா!!

ஸ்ரீலங்காவின் மிக பிரமாண்டமான கண்புரை சத்திர சிகிச்சைக்கான பரிசோதனை முகாம் பலாலி இராணுவ வைத்தியசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தின் ஏற்பாட்டில் தென்னிலங்கையை சேர்ந்த வைத்திய நிபுணர்களின் பங்கேற்புடன் இலவசமாக நடத்தப்பட்ட இம்மருத்துவ முகாமுக்கு கண் புரை நோயாளர்கள் 400 பேர் வந்திருந்தனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த முதியவர்களை மையப்படுத்தி இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் சிந்தனையில் இம்மனிதாபிமான வேலை திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ள போதிலும் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் கணிசமான எண்ணிக்கையில் கண் புரை நோயாளர்கள் வருகை தந்திருந்தனர்.

169 நோயாளர்கள் கண் புரை சத்திர சிகிச்சைக்கு அவசியம் உட்படுத்தப்பட வேண்டியவர்களாக வைத்திய நிபுணர்களால் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் வருகின்ற 06 ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டு இலவசமாக கண் புரை சத்திர சிகிச்சை வழங்கப்பட்டு வைத்திய கண்காணிப்புக்கு பின்னர் திருப்பி அழைத்து வரப்படுவார்கள். யாழ். மாவட்டத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் இவர்களுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்வதாயின் மொத்தமாக ஒரு கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இவர்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகளையும் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகமே மேற்கொண்டு உள்ளது. இராணுவத்தின் மனித நேய வேலை திட்டங்களுக்கான நாடளாவிய இணைப்பாளர் ஏ. செல்வா ஒருங்கிணைப்பு பணிகள் அனைத்தையும் முன்னெடுக்கின்றார்.

வட மாகாணத்தில் குறிப்பாக யாழ். மாவட்டத்தில் கண்புரை நோயாளர்கள் கணிசமான அளவில் காணப்படுகின்றனர். இவர்கள் கண் புரை சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு யாழ். போதனா வைத்தியசாலையையே பெரும்பாலும் நம்பி உள்ளனர். ஆனால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் ஒவ்வொரு நோயாளியும் யாழ். போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சையை பெறுவதற்கு சாதாரணமாக மூன்று மாதங்களுக்கு மேல் காத்திருக்க நேர்கின்றது.

கண் புரை நோயாளர்கள் இதனால் எதிர்கொள்ள நேர்ந்து இருக்கின்ற இடர்ப்பாடுகள் குறித்து இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சிக்கு ஏ. செல்வா தெரியப்படுத்தியதை அடுத்தே வட மாகாணத்தை குறிப்பாக யாழ். மாவட்டத்தை சேர்ந்த கண் புரை நோயாளர்களை கொழும்புக்கு அழைத்து சென்று விசேட வைத்திய நிபுணர்கள் மூலம் இலவச சத்திர சிகிச்சை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பட தலைப்பு: இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட கண் புரை சத்திர சிகிச்சைக்கான பரிசோதனை முகாமில் கலந்து கொண்ட நோயாளர்களில் ஒரு தொகையினரையும், இவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதையும் படங்களில் காணலாம்.