ஆவா ரவுடிகள் - நாவாந்துறை ரவுடிகளிற்கிடையில் பெரும்பகை: யாழில் வாள் வெட்டுக்களின் பின்னணி!

மானிப்பாயில் வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் சம்மந்தப் பிள்ளையார் கோவிலுக்கு அண்மையாக உள்ள வீடொன்றுக்குள் நேற்று வெள்ளிக்கிழமை (8) பகல் புகுந்த கும்பல் ஒன்று அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்தது.

இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அந்த வீட்டின் வாசல் படலை, வீட்டு முற்றத்தில் தரித்து நின்ற முச்சக்கர வண்டி மற்றும் வீட்டின் யன்னல்களைய கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பித்தது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அண்மைக்காலமாக ஆவா குழு ரௌடிகளிற்கும், நாவாந்துறை மற்றும் குருநகரிலுள்ள ரௌடிகளிற்குமிடையில் முடிவற்று நீளும் முறுகலின் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.

விரைந்து செயற்பட்ட பொலிசார், நாவாந்துறையைச் சேர்ந்த இரண்டு ரௌடிகளையும், இணுவிலைச் சேர்ந்த ரௌடி ஒருவனையும் இன்று அதிகாலை கைது செய்தனர்.

தாக்குதல் நடத்துவதற்கு ரௌடிகள் பாவித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளன.

அண்மையில் கோண்டாவிலில் இருந்த உணவகமொன்று தாக்கப்பட்டிருந்தது. மேற்படி இரண்டு பிரதேச ரௌடிகளிற்கிடையிலான முறுகலினால் இந்த தாக்குதல் நடந்திருந்தது. இதற்கு பதிலடியாக புன்னாலைகட்டுவனில் ஆவா குழு ரௌடிகள் இருவரின் வீட்டுக்குள் புகுந்து, நாவாந்துறை ரௌடிகள் பதில் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இப்படியே மாறிமாறி முடிவற்று நீளும் ரௌடிகளின் தாக்குதலில், இறுதியாக- அண்மையில் குருநகரிற்குள் பிரவேசித்த ஆவாகுழு ரௌடிகள் அங்கிருந்த ரௌடிகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களின் இரண்டு மோட்டார்சைக்கிள்களையும் “கைப்பற்றி“ வந்தனர்.

இந்த மோதல்களின் தொடர்ச்சியாகவே, மானிப்பாய் தாக்குதல் நடந்திருக்கலாமென ஊகிக்கப்படுகிறது.