கிளிநொச்சியிலிருந்து 61 ஆடுகளை கடத்திய நபர் கைது

கிளிநொச்சி பகுதியிலிருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் 61 ஆடுகளை கடத்தி சென்ற நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபரை வவுனியா - நொச்சிமோட்டை பாலத்தில் வைத்து பொலிஸார் இன்று அதிகாலை கைது செய்துள்ளதுடன், ஆடுகளை கொண்டு செல்ல பயன்படுத்திய வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர். 

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர் புத்தளத்தை சேர்ந்த 54 வயதானவர் என தெரியவந்துள்ளதுடன், வாகனத்தை மறித்து சோதனை நடவடிக்கை மேற்கொண்ட பொலிஸாருக்கு இரண்டாயிரம் ரூபா தருவதாகவும் வாகனத்தை விடுவிக்குமாறும் அவர் கேட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.