யாழ்ப்பாணக் குடாநாடு மக்கள் மீண்டும் இராணுவ முற்றுகைக்குள் ?? நடப்பது என்ன?

போருக்கு பிந்திய யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகளைகட்டம் கட்டமாக தீர்த்து வைக்கின்ற திட்ட வியூகத்தின் அடிப்படையில் புதிதாக இரு வேலை திட்டங்களை வருகின்ற தினங்களில் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகம் ஆரம்பிக்கின்றது.

தமிழ் இளையோர்களுக்கு வேலை வாய்ப்பு, முன்னாள் போராளிகள் அடங்கலாக வறிய, வருமானம்குறைந்த, போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு வாழ்வாதார, பொருளாதார மற்றும் நிவாரண உதவி, சுய தொழில் ஊக்குவிப்பு, இந்து ஆலயங்களுக்கு திருப்பணி, இரத்த தானம், கடல் அரிப்பு தடுப்பு, மர நடுகை மற்றும் காடு வளர்ப்பு என்று இன்னோரன்ன வேலை திட்டங்கள் பலவும் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் வழிகாட்டல், அறிவுறுத்தல் ஆகியவற்றுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இராணுவத்தின் மனித நேய வேலை திட்டங்களுக்கான நாடளாவிய இணைப்பாளரும், புலனாய்வு ஊடகவியலாளரும், சமூக சேவையாளருமான ஏ. செல்வா மூலமாக யாழ்ப்பாண மாவட்ட தமிழ் மக்களின் நியாயமான விருப்பம், அபிலாஷை மற்றும் எதிர்பார்ப்பு ஆகியவற்றை மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி நாடி பிடித்து பார்க்கின்றார்.

அவ்வகையில் வறிய, வருமானம் குறைந்த, போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களின் கட்டி முடிக்கப்படாத வீடுகளின் கட்டுமாணங்களை முழுமைப்படுத்தி கொடுக்கின்ற வேலை திட்டம் ஒன்றை புதிதாக ஆரம்பிக்கின்றார். இதன் முதல் கட்டமாக 100 பயனாளிகள் தெரிவு செய்யப்படுகின்றனர்.

இதே போலவே கட்ராக் என்று சொல்லப்படுகின்ற கண்புரை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு சத்திர சிகிச்சை வழங்குகின்ற திட்டம் ஒன்றையும் தொடங்குகின்றார். பெரும்பாலும் யாழ்.மாவட்டத்தில் உள்ள வயோதிபர்களில் அநேகர் கட்ராக் நோயால் பீடிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் இதற்கான சத்திர சிகிச்சையை பெறுவதற்கு ஒரு நோயாளி சாதாரணமாக மூன்று மாதங்கள் வரை காத்திருக்க நேர்கின்றது.

இதை கருத்தில் கொண்டே முதல் கட்டமாக கட்ராக் நோயாளிகள் 200 பேரை அடையாளம் கண்டு, அவர்களை கட்டம் கட்டமாக கொழும்புக்கு அழைத்து சென்று சத்திர சிகிச்சை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.