வட மாகாணத்தில் சிங்கள மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

வட மாகாணத்தில் சிங்கள மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கின் அனைத்து அரச நிறுவனங்களினாலும் வெளியிடப்படும் வேலை வாய்ப்பு குறித்த ஆவணங்கள், விலை மனுக் கோரல்கள் மற்றும் ஏனைய விளம்பரங்கள் என்பனவற்றை சிங்கள மொழியிலும் வெளியிடுமாறு வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உத்தரவிட்டுள்ளார்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுத்து மூலம் வட மாகாண ஆளுநர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

எனினும், மாகாண ஆளுநரின் இந்த உத்தரவு உதாசீனம் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு சிங்கள மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

வட மாகாண சபை உருவாக்கப்பட்ட காலம் முதல் ஆளுநர்களிடம் மக்கள் விடுத்து வரும் கோரிக்கைக்கு அமைய, சிங்கள மொழியிலும் ஆவணங்களை வெளியிடுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

எனினும், வட மாகாணசபை மற்றும் வடமகாணசபையின் ஏனைய அமைச்சுக்கள் ஆகியனவற்றில் வெளியிடப்படும் வேலைவாய்ப்புக்கள், போட்டிப் பரீட்சைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றிய அறிவித்தல்கள் விளம்பரங்கள் சிங்கள மொழியில் வெளியிடப்படுவதில்லை.

கடந்த ஆண்டில் வட மாகாணசபை அமைச்சுகள் சிலவற்றுக்காக முகாமைத்துவ உதவியாளர்கள், சாரதிகள், மொழிபெயர்ப்பாளர்கள் போன்ற பதவி வெற்றிடங்களுக்கான அறிவிப்புக்கள் வெளியிடப்பட்ட போதிலும் அவை சிங்கள மொழியில் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சுகாதார அமைச்சில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவை குறித்து சிங்கள மொழியில் அறிவிப்புக்கள் வெளியிடப்படவில்லை எனவும் இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது தமிழ் மொழி ஆவணங்களை எடுத்துச் சென்று சிங்கள மொழிக்கு மொழி பெயர்ப்பு செய்து கொள்ளுமாறு கூறுவதாக சிங்கள மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.