ஆமி பிடித்து வைத்து உள்ள காணியை விடுவித்து தருகிறார்களாம் அறிக்கை மன்னர்கள்!

தேசிய பாதுகாப்பை முன்னிறுத்தி நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நிலங்கள் இராணுவத்தின் வசம் வைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு நிலங்களை பிடித்து வைத்திருப்பதற்கு விசேட சட்ட ஏற்பாடுகள் இராணுவத்துக்கு இடம் கொடுக்கின்றன. ஆனால் போருக்கு பின்னர் கட்டம் கட்டமாக இராணுவத்தால் நில விடுவிப்புகள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான நிலங்கள் விடுவிக்கபட்டு விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வகையில்தான் தமிழ் - சிங்கள புத்தாண்டு பரிசாக யாழ்ப்பாண மக்களுக்கு இராணுவத்தால் சுமார் 500 ஏக்கர் நில பரப்பு வருகின்ற தினங்களில் விடுவித்து கொடுக்கப்படுவதாக உள்ளது.

யாழ். மாவட்ட கட்டளை தளபதியாக இருந்து இலங்கை இராணுவ தளபதியாக பதவி நிலை உயர்வு பெற்று உள்ள லெப்டினண்ட் ஜெனரல் மஹேஸ் சேனநாயக்க, யாழ். மாவட்ட தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி ஆகியோர் அவர்களுடைய காலத்தில் தேசிய பாதுகாப்புக்கு பங்கம் இல்லாத வகையில் மக்கள் நலனுக்காக இந்நிலங்களை விடுவித்து கொடுக்க வேண்டும் என்று முழுமூச்சாக உள்ளனர்.

கீரிமலை வீட்டு திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 25 வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கின்ற வைபவம் மூன்று வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றபோது இதில் பிரதம விருந்தினராக பங்கேற்ற இராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனரல் மஹேஸ் சேனநாயக்க இக்காணிகளைஇராணுவம் விடுவித்து தர உள்ளது என்பதை பூடகமாக பேசினார். அத்தோடு தேசிய பாதுகாப்பு பங்கம் நேரும் என்று கண்டு கொள்கின்ற பட்சத்தில் தருபவற்றை எல்லாம் மீள பறித்து கொள்ளவும் முடியும் என்று இலேசாக எச்சரிக்கவும் செய்தார். இதே நேரம் இவ்விழாவில் பங்கேற்று இருந்த பிரதேச செயலாளர்கள் முதல் அரசாங்க அதிபர் வரையான உத்தியோகத்தர்கள் இந்நிலங்களை மக்களுக்கு விடுவித்து தாருங்கள் என்று இராணுவ தளபதியிடம் கெஞ்சாத குறையாக கோரினார்.

ஆனால் இராணுவம் அதன் வசம் உள்ள இந்நிலங்களின் ஒரு தொகையை விடுவித்து தர உள்ளது என்கிற செய்தியை தொடர்ந்து பல பகிடிகள் ஊடக அறிக்கைகளாக அச்சேறி வருகின்றன. சுவாமிநாதனின் மீள்குடியேற்ற அமைச்சு அதுதான் இந்நிலங்களை விடுவித்து தருவதாக செய்தி வெளியிட்டு உள்ளது. யாழ். மாவட்ட ஆளுனர் அலுவலகம் அதுதான் இந்நிலங்களை விடுவிப்பதாக அறிக்கையிட்டு உள்ளது. போதா குறைக்கு யாழ். கச்சேரி அதுதான் இந்நிலங்களை விடுவிப்பதாக அறிவித்து உள்ளது. இந்நில விடுவிப்புக்கு அவர்கள்தான் காரண கர்த்தா என்பதாக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜெயகலா மகேஸ்வரன், மாவை சேனாதிராசா போன்றோர் ஊடக பிரகடனம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் குரலாக செயற்படுகின்ற உதயன் பத்திரிகை இந்நிலங்கள் தொடர்பான வரைபடம் இராணுவத்திடமே இருப்பதால் இந்நிலங்கள் விடுக்கப்படுவதில் தாமதம் நேர்வதாக திடீர் பூச்சாண்டி காட்டி உள்ளது.

எது எப்படி இருந்தாலும் அறிக்கை மன்னர்களால் நிலங்களை மீட்டு தர முடியாது என்பது எப்படியோ ஊர்ஜிதம் ஆகி விட்டது. இராணுவம் மனம் வைத்தால் மாத்திரமே காணிகள் விடுவிக்கப்படும் என்பது திண்ணம் ஆகும்.