தமிழ் பேசும் மூவர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாகின்றனர்

மாவட்ட நீதிபதி திருமதி சிறிநிதி நந்தசேகரன், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற உத்தியோகத்தர்களால் கடந்த டிசெம்பரில் கௌரவிக்கப்பட்ட போது, மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நினைவுச் சின்னம் வழங்கி வைத்தார்.

*மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 13 பேர் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் நியமிக்கப்படவுள்ளனர் என அறிய முடிகிறது. மாவட்ட நீதிபதிகள் திருமதி சிறிநிதி நந்தசேகரன், என்.எம்.எம் அப்துல்லா மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மூத்த அரச சட்டவாதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன் ஆகிய மூவர் வடக்கு – கிழக்கிலிருந்து மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் நியமிக்கப்படவுள்ளனர்.*

மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 75 பேரிலிருந்து 110 பேராக அதிகரிக்க நாடாளுமன்று அனுமதித்திருந்தது. இந்த நிலையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் 13 பேர் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர்.

*நீதிபதி சிறிநிதி நந்தசேகரன்*

வவுனியா மாவட்ட நீதிபதி திருமதி சிறிநிதி நந்தசேகரன், இலங்கை நீதிச் சேவையில் சிறப்புத் தரத்தில் உள்ளார்.

அவர், வவுனியா நீதிவான் நீதிமன்றுக்கு 2002ஆம் ஆண்டு முதல் நியமனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து ஊர்காவற்றுறை நீதிமன்றுக்கு மாற்றலாகி வந்த அவர், பெரும் நெருக்கடியான காலப்பகுதியிலும் அதன் பின்னரும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நியாயாதிக்க வலயத்திலுள்ள நீதிமன்றங்களில் நீதிவானாகவும் மாவட்ட நீதிபதியாகவும் சேவையாற்றினார்.

2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் தீவகம் அல்லப்பிட்டிப் பகுதியில் கடும் எறிகணைத் தாக்குதலுக்குள் சிக்குண்டிருந்த அப்பாவிப் பொதுமக்களை நீதிபதி நந்தசேகரன் பாதுகாத்திருந்தார். இராணுவ ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த வேளையில்  யாழ்ப்பாணத்திலிருந்து சென்று அந்த மக்களை மீட்டு வந்திருந்தார்.

அவரின் இந்தச் செயற்பாட்டை அமெரிக்கா பாராட்டியிருந்தது. “இலங்கையில் மிக நெருக்கடியான  மோதல் மிகு பிரதேசத்தில், அங்குள்ள எல்லா இனக் குழுமங்களையும் நீதியின் முன் சமமாக  நடாத்துவதில் ஒரு சட்டத்தரணியாகவும், நீதிபதியாகவும் பொறுப்புணர்வையும் துணிவையும்  வெளிப்படுத்திய ஒரு முன்னுதாரணராக நீதிபதி திருமதி சிறிநிதி நந்தசேகரன் திகழ்கிறார்” என அமெரிக்கா பாராட்டியிருந்தது.

அதற்காக நீதிபதி சிறிநிதி நந்தசேகரனுக்கு ‘அமெரிக்காவின் வீரப்பெண்’ விருதை அந்த நாடு 2009 மார்ச் 24ஆம் திகதி வழங்கிக் கௌரவித்தது.

அதேபோன்று உலக பௌத்த இளையோர் சங்க சபையால் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 14 வருடாந்த  மாநாட்டில் “நியாயத்தை நிலைநாட்டுவதற்காக ஆற்றிய சேவை”யைப் பாராட்டி நீதிபதி சிறிநிதி நந்தசேகரன் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

*நீதிபதி என்.எம்.எம். அப்துல்லா *

திருகோணமலை மாவட்ட நீதிபதியான என்.எம்.எம் அப்துல்லா, இலங்கை நீதிச் சேவையில் சிறப்புத் தரத்தில் உள்ளவர். வடக்கு – கிழக்கில் நீதிவானாகவும் மாவட்ட நீதிபதியாகவும் அவர் கடமையாற்றினார்.

*அரச சட்டவாதி சூசைதாஸன்*

சட்ட மா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டவாதியாக 14 ஆண்டுகளாகக் கடமையாற்றும் சட்டத்தரணி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன், யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார் உள்ளிட்ட மேல் நீதிமன்றங்களில் அரச சட்டவாதியாகக் கடமையாற்றினார்.

யாழ்ப்பாணம் சென்.ஜேம்ஸ் இளவாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட டெனிஸ் சாந்தன் சூசைதாஸன், யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவராவார்.