70 வீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு - யாழ். மாவட்டத்தில் 62 சதவீத வாக்குப்பதிவு

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மொத்த வாக்குப்பதிவு 70 இற்கும் அதிகமான வீதமாக அமைந்திருந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று காலை ஆரம்பித்த வாக்குப்பதிவுகள் மாலை 4 மணியளவில் முடிவடைந்தது. இதேவேளை மாத்தளை மாவட்டத்திலே அதிகப்படியான வாக்குகள் பதிவாகியுள்ளது. அங்கு 80 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் களுத்துறை, அநுராதபுரம், மொனறாகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அதிக 75வீத வாக்களிப்புகள் இடம்பெற்றுள்ளன.

பெரும்பான்மையான பகுதிகளில் எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாததோடு அமைதியான முறையில் தேர்தல் இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வாக்கெண்ணும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

யாழ். மாவட்டத்தில் 62 சதவீத வாக்குப்பதிவு

2018ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், யாழ். மாவட்டத்தில் 62 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளதாக, அம்மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.

யாழ். மத்திய கல்லூரி வாக்கெண்ணும் மத்திய நிலையத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் தேர்தல் சுமூகமான முறையில் நடைபெற்றுள்ளதுடன், பெரும்பாலான பகுதிகளில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர்.

521 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் நடைபெற்றுள்ளன. மேலும், 243 வாக்கெண்ணும்ம் நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இன்றிரவு 7 மணியளவில் முதலாவது வட்டாரத்தின் முடிவுகள் வெளியாகுமெனவும், அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தேர்தல் வன்முறைகள் தொடர்பான சிற்சில முறைப்பாடுகள் கிடைத்ததைத் தொடர்ந்து, விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அவர் கூறியுள்ளார்.